Last Updated:
உத்தரபிரதேசம் திகம்கரில் ரச்னாதேவி கொலை செய்யப்பட்டு உடல் 7 துண்டுகளாக வெட்டப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை 7 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு பகுதிகளில் வீசிய முன்னாள் கிராம பஞ்சாயத்துத் தலைவர் உட்பட இருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் திகம்கர் பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் உள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. நிலத்தின் உரிமையாளர் கிணற்றில் பார்த்தபோது சாக்குமூட்டை ஒன்று மிதந்து கிடந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை கண்டு அதிர்ந்து போனார்.
உடனே அதுகுறித்து தோடிபதேபூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். இதில் இறந்த பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் மற்றும் தலை கிடைக்காததால் குழப்பமடைந்தனர். இதனைத்தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள லகேரி ஆற்றிலிருந்து அந்த பெண்ணின் தலையை போலீசார் கண்டெடுத்தனர்.
இருப்பினும் உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. அதனால், சுவரொட்டிகள் அடித்து அருகில் உள்ள கிராமங்களில் வினியோகித்தனர். அப்போது, காணாமல்போன தன் அக்கா ரச்னா தேவியை தேடிக் கொண்டிருந்த இளைஞர் அந்த சுவரொட்டியைப் பார்த்து போலீசாரை அணுகினார். அவரிடம் விசாரித்ததில் உயிரிழந்த பெண் ரச்னாதேவிதான் என்பதை உறுதி செய்தனர்.
ரச்னாதேவி எப்படி உயிரிழந்தார்? அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசியது யார்? எதற்காக இந்த கொலை அரங்கேற்றப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கணவனை இழந்த ரச்னாதேவி குடும்பத்துடன் திகம்கர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ரச்னா தேவி தனக்கு இருந்த ஒரு பிரச்சினையை தீர்க்க பக்கத்து கிராமமான கிஷோர்புராவைச் சேர்ந்த முன்னாள் கிராம பஞ்சாயத்துத் தலைவர் சஞ்சை பட்டேலிடம் உதவி கேட்டிருக்கிறார். அந்த பிரச்சினை தொடர்பாக அடிக்கடி அவரை ரச்னாதேவி சந்தித்து வந்தார். நாளடைவில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ரச்னா தேவி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சை பட்டேலிடம் வற்புறுத்தியுள்ளார். அவரும், திருமணம் செய்து கொள்வதாக கூறி நாட்களை கடத்தியிருக்கிறார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் உறவை கிராமத்தினர் அனைவரிடமும் கூறி விடுவேன் எனக் கூறி ரச்னா மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சை படேல், ரச்னாதேவியை கொலை செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு ரச்னா தேவியை வருமாறு அழைத்திருக்கிறார் கிஷோர். அங்கு தனது மருமகன் சந்தீப் பட்டேலுடன் சேர்ந்து ரச்னா தேவிவை கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ரச்னாதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை 7 துண்டுகளாக வெட்டி, உடல் பாகங்களை பிரித்து தனிதனி சாக்கு மூட்டைகளில் கட்டியுள்ளனர். ஒரு மூட்டையை கிணற்றிலும், மற்றொரு மூட்டையை பாலத்திற்கு அடியிலும் வீசி சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளிகளான சஞ்சை பட்டேல் மற்றும் அவரது மருமகன் சந்தீப் பட்டேல் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலைக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
August 22, 2025 4:32 PM IST


