Last Updated:
மேகாலயா மாநிலத்தில் 8,000-க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. பாதிப்புகள் பதிவாகி உள்ளதாகவும், தற்போது எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலில் நாட்டில் இந்த மாநிலம் ஆறாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த மேகாலயா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்புகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் 8,000-க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. பாதிப்புகள் பதிவாகி உள்ளதாகவும், தற்போது எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவலில் நாட்டில் இந்த மாநிலம் ஆறாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பைக் குறைப்பது குறித்த முழுமையான கொள்கையை உருவாக்குவது குறித்து விவாதிக்க மேகாலயா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்புகளை கருத்தில்கொண்டு துணை முதல்வர் பிரெஸ்டோன் டினிசோங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில சுகாதார அமைச்சர் அம்பரீன் லிங்டோ, சமூக நலத்துறை அமைச்சர் பால் லிங்டோ மற்றும் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் காசி ஹில்ஸ் (East Khasi Hills) மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,432 எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், இவர்களில் 1,581 பேர் மட்டுமே தற்போது எச்.ஐ.வி. பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. கவலையளிக்கும் விதமாக, மாவட்டத்தில் 159 மரணங்கள் ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART) சிகிச்சையை எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்டவை.
ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை (ART) என்பது எச்.ஐ.வி தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்துகளைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இது வைரஸை அடக்குவதற்கும் அது பெருகுவதைத் தடுப்பதற்கும் எச்.ஐ.வி மருந்துகளின் கலவையை எடுத்துக்கொள்வதை உள்ளடக்கியது. இதன் மூலம் எச்.ஐ.வி. உள்ள நபர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மற்றவர்களுக்கு பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.
திருமணத்திற்கு முன்பே எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்கும் நடவடிக்கையானது பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்யவும், பார்ட்னர்களிடையே எச்.ஐ.வி பரவுவதைத் தடுக்கவும் மற்றும் இன்னும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும் என்று மேகாலயா மாநில அதிகாரிகள் நம்புகின்றனர். மாநிலத்தில் Garu hills மற்றும் Jaintia Hills பகுதியில் இதே போன்ற கூட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் பாதிப்புகள் சார்ந்த உத்திகளை உருவாக்கவும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு இலக்கு வைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுப்பதையும் உறுதி செய்யும். திருமணத்திற்கு முன்பு எச்.ஐ.வி பரிசோதனை கட்டாயமாக உள்ள கோவா போன்ற மாநிலங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
திருமணத்திற்கு முன்பு அனைவருக்கும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்குவதில் கோவாவைத் தொடர்ந்து மேகாலயாவும் இருக்கலாம் என்று மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மஸல் அம்பரீன் லிங்டோ குறிப்பிட்டு உள்ளார். மேகாலயா மாநிலமும் தனது மக்களைப் பாதுகாக்க இதே போன்ற விதிகளைக் கொண்டுவர விரும்புகிறது.
July 30, 2025 4:49 PM IST