
Last Updated:
இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்.
திருப்பதி நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவஸ்தானத்தில் வேலை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நாளை திறக்கப்பட உள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக சர்வ தரிசன டோக்கன்கள் இன்று அதிகாலை முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக விஷ்ணு நிவாசம் உட்பட எட்டு இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்.
திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். நெரிசலில் சிக்கியவர்கள் கதறித் துடித்ததால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார். பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அதேபோல் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சீனிவாசம் வளாகம் பகுதியில் அமைக்கப்பட்ட கவுன்டரிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. இருவேறு இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காவல்துறையினரை கடிந்து கொண்டார். சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய சந்திரபாபு நாயுடு, பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதா என கடிந்து கொண்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், நெரிசலுக்கு முன் வாயிலை திறந்துவிட்ட டிஎஸ்பியை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
January 09, 2025 6:32 PM IST
“திருப்பதி நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவஸ்தான வேலை” – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

