Last Updated:
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் மீது குடிபோதையில் ஏறி, தங்க கலசங்களைச் சேதப்படுத்த முயன்ற நபர் போலீசில் சிக்கினார். பலத்த பாதுகாப்பையும் மீறி கோயில் கோபுரத்தில் ஏறி அதிகாரிகளை அலறவிட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோயில் நடை அடைக்கப்பட்ட பின்னர், தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள், மாநில போலீசார், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் உள்ளிட்ட காவல் படையினர் கோயிலுக்கு வழக்கம்போல் காவலில் இருந்தனர்.
அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உயரமான கோயில் மதில் சுவர் மீது ஸ்பைடர் மேன் போல ஏற ஆரம்பித்தார். கோபுரத்தில் ஏதோ ஒரு அசைவை உணர்ந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், உடனே வயர்லெஸ் மூலம் தகவல் கொடுக்க, ஒட்டுமொத்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையும் அதிர்ந்தது.
உடனடியாக விஜிலன்ஸ் துறை உயர் அதிகாரிகள், போலீஸ் எஸ்.பி., காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கு அலர்ட் சென்று ஒரு கூட்டமே அங்கு கூடியது. அதற்குள் ராஜகோபுரத்தின் உச்சிக்குச் சென்ற மர்ம நபர், அங்கிருக்கும் தங்க கலசங்களை உடைத்து சேதப்படுத்த முயன்றார். மைக்கில் கீழே இறங்கச் சொல்லி வார்னிங் கொடுத்தபோது, குடிக்க குவாட்டர் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன் எனக் கூறி அடம்பிடித்து அனைத்து அதிகாரிகளையும் கடுப்பேற்றி உள்ளார்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க, கோயில் கோபுரத்தில் ஏறி அலறவிட்ட நபர் தெலங்கானா மாநிலம் நிஜமாவாத் மாவட்டத்தில் உள்ள பெத்த மல்லாரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் திருப்பதி என்பதும் தெரியவந்தது.


