Last Updated:
செயற்கை நெய் தயாரிக்க பாத்ரூம் கழுவ பயன்படும் ரசாயனங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை அளித்தது.
அந்த அறிக்கையில், தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மிருக கொழுப்புகள் கலந்ததாக கண்டறியப்படவில்லை எனவும் மாறாக, பாமாயில் மற்றும் பாமாயிலில் நெய் மணம் வருவதற்காக சில வேதிப் பொருட்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்ய ஒரு நபர் ஆணையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் எமிகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “பாத்ரூம் கழுவ பயன்படும் ரசாயனங்களை பயன்படுத்தி நெய் தயார் செய்து அந்த நெய் மூலம் லட்டு தயார் செய்து நமக்கு சாப்பிட கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் மிருக கொழுப்புகளில் இரசாயனத்தை கலந்து நெய் தயார் செய்ய குறைந்த தொகை செலவாகும். ஸ்ரீசைல கோவிலிலும் இந்த விவகாரம் நடைபெற்றுள்ளது” இவ்வாறு பேசியுள்ளார்.


