Last Updated:
திருப்பதி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈசார் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவி ராயல் சீமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினும் பாதிக்கப்பட்டது.
திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென்று தீ விபத்து. இதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் சீமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவி இன்ஜின் கருகி பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை திருப்பதிக்கு வந்து சேர்ந்த ஈஷார் விரைவு ரயிலை சுத்தம் செய்வதற்காக திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள சுத்தம் செய்யும் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென்று புகை வருவதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்கு இடையே சிறிய பொறியாக ஏற்பட்ட தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி அந்த ரயில் பெட்டி முழுவதுமாக பற்றி எரிய துவங்கியது. இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த ரயில்வே அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை மட்டும் தனியாக கழற்றிவிட்டு ரயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் சீமா எக்ஸ்பிரஸ் இன்ஜினுக்கும் தீ பரவியது. எனவே ரயில்வே அதிகாரிகள் ராயல் சீமா எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினை தனியாக கழற்றிவிட்டு மற்ற பெட்டிகளை வேறொரு ரயில் இன்ஜின் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த திருப்பதி தீயணைப்பு படையினர் ரயில் பெட்டி, ரயில் இன்ஜின் ஆகியவற்றில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக திருப்பதி ரயில் நிலைய பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரணையை துவக்கி உள்ளனர்.
Tirupati,Chittoor,Andhra Pradesh
July 14, 2025 3:49 PM IST

