
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசலில் சென்று தரிசனம் செய்ய நேற்று முன்தினம் இரவு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதிக்கு கூட்டம் வருவது புதிதா என்றும் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதா என்றும் அதிகாரிகளை கடிந்து கொண்டார். திருப்பதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிக்க: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு – கோவிந்தா முழக்கத்துடன் வழிபட்ட பக்தர்கள்
இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த டிஎஸ்பி ரமண குமார் மற்றும் அந்த பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தேவஸ்தான அதிகாரி ஹரிநாத ரெட்டி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பதி எஸ்பி சுப்பராயுடு, தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கவுதமி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனி நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் காலம் 10 நாட்கள் என கடந்த 2022-ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், பழைய முறைப்படி 2 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதனிடையே, காயமடைந்தவர்களை சந்திக்க துணை முதலமைச்சர் பவன் கல்யாணும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் தொண்டர்களும் போட்டி போட்டு முழக்கங்களை எழுப்பியதால் மருத்துவமனை வளாகம் அதிர்ந்தது.
பவன் கல்யாண் சென்ற பின்னர், ஜெகன் மோகன், ரோஜா உள்ளிட்டோர் காயமடைந்தவர்களைச் சந்தித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ரோஜா, நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் சந்திரபாபு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“லட்டு விவகாரத்தில் பரிகார விரதமிருந்த பவன் கல்யாண் இந்த சம்பவத்திற்கும் விரதம் இருப்பாரா அல்லது சந்திரபாபுவை பதவி விலகக் கோருவாரா” எனவும் ரோஜா கேள்வி எழுப்பினார்.
January 10, 2025 9:40 AM IST
Tirupati | திருப்பதியில் இனி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு இல்லை – சந்திரபாபு நாயுடு புதிய அறிவிப்பு

