கிள்ளான்:
திருடப்பட்ட மற்றும் பழைய வாகனங்களைப் பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்து வந்த பாகிஸ்தான் நாட்டவரைப் பின்னணியாகக் கொண்ட கும்பலைச் மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளதுடன், ஜாலான் காப்பாரில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 20 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 4:30 மணியளவில் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட இச்சோதனையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 ஆண்கள் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காப்பார் பகுதியில் ஈமச்சடங்கு சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான பன்நோக்கு வாகனம் (MPV – அமரர் ஊர்தி) காணாமல் போன சம்பவத்திலும் இக்கும்பலுக்குத் தொடர்பிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சோதனையில் கைதான இந்தோனேசியர்களிடம் நடத்திய விசாரணையில், சொந்த நாட்டிற்குத் திரும்பக் காத்திருக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு இக்கும்பல் ரகசியப் புகலிடம் அமைத்துக் கொடுத்தது அம்பலமானது.
இத்தகைய சேவைகளுக்காக ஒவ்வொரு சட்டவிரோதக் குடியேறியிடமிருந்தும் RM5,000 முதல் RM10,000 வரை இக்கும்பல் வசூலித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காகக் குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 1959/63 குடிநுழைவுச் சட்டம், 1966 கடப்பிதழ் சட்டம், 1963 குடிநுழைவு விதிகள் மற்றும் 2007 மனித கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டம் (ATIPSOM) ஆகியவற்றின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோதக் குடியேறிகளுக்குப் புகலிடம் அளிப்பவர்கள், வேலை வழங்குபவர்கள் அல்லது உடந்தையாக இருப்பவர்கள் மீது எவ்விதச் சலுகையுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறைத் தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
The post திருடப்பட்ட வாகனங்களைப் பாகங்களாகப் பிரித்து விற்ற கும்பல் கைது: 20 வெளிநாட்டினர்கள் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

