கோழி திருடப்பட்டதாக எழுந்த தகராறைத் தொடர்ந்து ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜபுரகே சுகத் வீரரத்ன மற்றும் ராஜமுனிகே நிஹால் சமிந்த எனப்படும் மகத்தயா ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விஜேமுனிகே குணவர்தன என்பவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் தங்காலை மேல் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
கிராமவாசிக்குச் சொந்தமான கோழி
குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை, நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் பி. அபேகூன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஒக்டோபர் 30ஆம் திகதி வழங்கியது.

வழக்கு விசாரணைகளின்படி, சம்பவத்தன்று உயிரிழந்தவர் மற்றொரு கிராமவாசிக்குச் சொந்தமான கோழியைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அன்றைய தினம் மாலை அவரது வீட்டுக்கு அருகில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் கண்ட உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியத்தின்படி, முதலாவது குற்றவாளி தனது மகனைக் கத்தியால் குத்தியபோது, இரண்டாவது குற்றவாளி அவரைப் பிடித்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 11 கத்திக்குத்துக் காயங்களுக்கு உள்ளான அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எனினும், வழக்கின் முக்கிய நேரடி சாட்சியான தந்தை முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், தமது தரப்பு நியாயங்களை விசாரணை நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்து இரு குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்திருந்தனர்.
நம்பகத்தன்மை வாய்ந்த சாட்சியம்
இதனைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், உயிரிழந்தவரின் தந்தை வழங்கிய சாட்சியம் நம்பகத்தன்மை வாய்ந்தது எனத் தெரிவித்ததுடன், ஏனைய சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளும் அதனை உறுதிப்படுத்துவதாகக் குறிப்பிட்டது.
தலைமை நீதியரசர் அல்லாத நீதியரசர் மேனகா விஜேசுந்தர தீர்ப்பை அறிவிக்கையில், குறித்த நேரடி சாட்சி குறுக்கு விசாரணையைத் திருப்திகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட சாட்சியங்களை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் அரச தரப்பு முன்வைத்த சம்பவ விபரங்களுடன் ஒத்துப்போவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குற்றவாளிகளின் தரப்பு வாதங்கள், அரச தரப்பு வழக்கில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாகத் தீர்மானித்த உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டை நிராகரித்ததுடன் தங்காலை மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானங்களையும் உறுதிப்படுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

