Last Updated:
கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹோட்டலில் திருட வந்த அனிஷ், முதலில் ஆம்லெட், பீஃப் கறி சாப்பிட்டு, 25 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றார்.
கேரள மாநிலத்தில் ஹோட்டலுக்கு திருட சென்ற திருடன் சுடச் சுட ஆம்ப்லெட் பீஃப் கறி சாப்பிட்டு விட்டு சொகுசாக பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சந்திர நகர் பகுதியில் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலை வெகு நாட்களாக நோட்டம் விட்டு வந்த திருடர் சம்பவத்தன்று இரவு களத்தில் இறங்கியிருக்கிறார். திருடத்தான் வந்திருக்கிறோம் என்ற அச்சமோ, பதற்றமோ சிறிதும் இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற திருடர் முதலில் சாப்பிட்டு விட்டு திருடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அங்கிருந்த முட்டைகளை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பீப் கறி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந் திருடர் அதை வேக வைத்து ஒரு வெட்டு வெட்டியிருக்கிறார். அதன் பின்னர் நிதானமாக ஹோட்டலை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், மறுநாள் ஹோட்டலுக்கு வந்த ஊழியர்கள் பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி யார் என்கிற அடையாம் தெரியவந்தது முதல்கட்ட விசாரணையில் ஊர் ஊராக சென்று கைவரிசை காட்டி வரும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரப்பாயி அனிஷ் என்கிற சிவகுமார் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருடித் திருடி பயத்தை தொலைத்த அனிஷ் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைக்கு மேல் இருந்த சிசிடிவியை கவனிக்காத திருடன் போலீசாரிடம் தொக்காக சிக்கியது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
June 19, 2025 9:04 PM IST
திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது… ஒரே ஒரு தடயத்தால் சிக்கியது எப்படி?


