Tamilnadu
oi-Vishnupriya R
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் ஒலித்தது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது.

இந்தக் கோவிலில் சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகள் கொண்ட கோவில் ராஜகோபுரம் உள்ளது. இந்த ராஜகோபுரத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய மணி உள்ளது.
அந்த காலத்தில் நாள்தோறும் 12 மணிக்கு நடைபெறும் உச்சிக்கால பூஜை முடிந்து கோபுர மணி ஒலிக்கப்படும். இந்த கோபுர மணி ஒலிக்கப்பட்ட பின்னரே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவை உண்டதாக கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மணி கோபுரத்தின் உச்சியில் உள்ள 9-வது நிலையில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வந்த பெருந்திட்ட வளாக பணிகளில் இந்த மணியும் புதுப்பிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை இந்த மணி ஒலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலய மணியை வருகிற ஆவணித் திருவிழா நாட்களில் தினமும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து இன்று மதிய பூஜையின் போது நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த மணி ஒலிக்கப்பட்டது. சுமார் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இந்த மணி ஒலிக்கப்பட்டது.

மேலும் இந்த மணி தினமும் ஒலிக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

