இந்த புதிய ஒழுங்குமுறையின்படி, பாலில் உள்ள அஃப்லாடாக்சின் (Aflatoxin) அளவுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பதப்படுத்தப்பட்ட திரவப் பாலுக்கான புதிய பாதுகாப்புத் தரங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஒழுங்குமுறையின்படி, பாலில் உள்ள அஃப்லாடாக்சின் (Aflatoxin) அளவுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள 98ஆம் இலக்க பணிப்புரையின்படி, இலங்கையில் விற்பனை செய்யப்படும் அல்லது விநியோகிக்கப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட திரவப் பாலும் SLS 1815 தரநிலைக்கு இணங்க இருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு கிலோகிராம் பாலில் அஃப்லாடாக்சின் அளவு 0.5 மைக்ரோகிராமுக்கு (0.5 µg/kg அல்லது ppb) மிகையாகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இந்தப் பாதுகாப்பு வரம்பை மீறும் வகையில் திரவப் பாலை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், பொதியிடல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நடைமுறை, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். எனவே, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இந்தத் திகதிக்கு முன்னதாகவே உரிய தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாட்டில் உணவுப் பாதுகாப்புத் தரத்தை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

