தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் திமுகவினருடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர வக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்காசியில் திமுக – காங்கிரஸ் ஆகிய கூட்டனி கட்சிகளுக்குள் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக இசை மதிவாணன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தென்காசி தொகுதியில் திமுக – காங்கிரஸ் இடையே தேர்தல் பிரச்சார பணிகளில் இணக்கம் இல்லை எனக் கூறப்படுகிறது. திமுகவினர், பிரச்சாரத்திற்கு கூட காங்கிரஸ் கட்சியினரை அழைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர், திமுகவுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறும்பலாபேரியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வட்டார தலைவர் கே.பி. குமார் பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள், நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசும்போது, இந்தியா கூட்டணி சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு திமுகவினர் எவ்வித அழைப்பும் கொடுக்கவில்லை, ஆலோசனைக்கும் அழைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை தேர்தல் பணிகளை மேற்கொள்ள அழைக்காததால் அதனை கண்டித்து 5 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் கீழப்பாவூர் மேற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரம் செய்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து இந்தியா கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதே சமயம், தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட யாரும் இதுவரை கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காததைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக உடன் இணைந்து தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிகளை செய்ய மாட்டோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தென்காசியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியான திமுகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே தேர்தல் பணிகளை திமுகவுடன் சேர்ந்து செய்ய மாட்டோம் என கூறி தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பது தென்காசி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான் பாண்டியன் ஆகியோர் களத்தில் உள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இணக்கமான உறவில் இல்லாததால் திமுக வேட்பாளருக்கு சிக்கல் ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுக – காங்கிரஸ் மோதல் தீருமா?