Last Updated:
Pakistan: பாகிஸ்தானில் பொதுமக்களே திடீர் கொள்ளையர்களாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான FIA சீனர்கள் நடத்தி வந்த போலி கால் சென்டரில் நுழைந்து ரெய்டு நடத்திய போது, பொதுமக்கள் பலரும் உள்ளே புகுந்து கம்ப்யூட்டர், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சீன நாட்டவர்களால் நடத்தப்படும் ஒரு போலி கால் சென்டர் குறித்த தகவல் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த போலி நிறுவனத்தை கவனித்து வந்த FIA கடந்த 12ம் தேதி அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை புலனாய்வு அமைப்பு கைப்பற்றியது. போலி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்தனர். பலர் தப்பியோடியதாகத் தெரிகிறது. இந்த சீன நிறுவனத்தினர் மோசடிக்கு பாகிஸ்தானியர்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்த தகவல் உள்ளூர் மக்களிடையே பரவிய நிலையில், பலரும் அந்த போலி கால் செண்டர்களுக்குள் புகுந்து கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். மடிக்கணினிகள், கம்ப்யூட்டர்கள், மாணிட்டர்கள், மற்றும் விலை உயர்ந்த எலெக்ட்ராணிக் கேட்ஜெட்டுகளை பொதுமக்கள் பலரும் கையில் எடுத்துக் கொண்டு சாவகாசமாக நடந்து சென்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கால் சென்டரில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் சிறிது காலமாக அறிந்திருந்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு மூத்த அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தனர் என்று FIA வட்டாரங்கள் தெரிவித்தன. மோசடித் திட்டங்கள் மூலம் பல்வேறு நாட்டு மக்களை இந்த கும்பல் ஏமாற்றி வந்திருப்பது தெரியவந்துள்ளது. போலி கால் சென்டரில் சந்தேக நபர்களைப் பிடிப்பதில் FIA வெற்றி பெற்ற போதிலும், மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஆதாரமாக கைப்பற்றப்பட வேண்டிய மதிப்புமிக்க உபகரணங்களை பொதுமக்கள் கொள்ளையடிப்பதை தடுக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
March 17, 2025 7:28 PM IST


