திடீரென 100, 200 ரூபாய் நோட்டுகளை வீட்டில் சேமிக்கும் மக்கள்! யுபிஐ காலத்திலும் ஏன் இப்படி?
பெட்டிக்கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள் என எங்கு பார்த்தாலும் கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. சமீப காலமாக இந்தியர்கள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகமாக தங்கள் வீடுகளில் சேமித்து வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த திடீர் சேமிப்பு?அதுவும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கான தேவை ஏன் வந்தது? என்பதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஏன் இந்த திடீர் மாற்றம்?: போர்ப் பதற்றம் தொடங்கியவுடன் தங்கத்தின் விலை கிடுகிடவென உயர்ந்தது. அப்போது சில முதலீடாளர்கள் தங்கத்தை அதிகம் வாங்கினர். இதனால் தங்க விலை உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு பல காரணங்களால் தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது.
இக்கட்டான சூழ்நிலை வரும்போது மக்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள். ஆனால் இந்த முறை தலைகீழாக 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த போர் பதற்றத்தின் காரணமாக இது போன்ற சிறிய அளவிலான தொகையை சேமித்து வைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அவசர காலங்களில் கையில் பணத்தை வைத்திருப்பதையே மக்கள் வசதியானதாக கருதுகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது மக்கள் அவசரத் தேவைக்கு பணத்தை சேர்த்து வைத்தனர். அதன் பிறகு சுமார் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் சப்ளை பாதித்ததோடு, எல்பிஜி சிலிண்டர்கள், பெட்ரோல், டீசல் விலை என அனைத்தும் உயர்ந்தது. இதனால் மக்கள் பெரிய பெரிய டேங்க்-களில் பெட்ரோல் டீசலை வாங்கி வந்தனர்.
எரிபொருளுக்கு இதுபோன்ற பிரச்சனையை ஏற்பட்டால்.. மொபைல் போன் டவர்கள் பாதிக்கப்படும். இதனால் இணைய வங்கி சேவையை பெற முடியாது. மேலும் வங்கி சேவைகளிலும் பிரச்சனை வந்துவிடும். அந்த நேரத்தில் கேஷ் மட்டுமே உதவும் என்று நம்புகின்றனர். இது உண்மையிலேயே கொரோனா காலத்தில் நடந்தது தான். அப்போது வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதோடு.. லாக்டவுன் போடப்பட்டிருந்ததால் மக்களால் வெளியில் சென்று எதையும் செய்ய முடியவில்லை. ஏடிஎம்மிலும் பணம் சட்டென காலியானது.
இதையெல்லாம் நினைத்து தான் மக்கள் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை சேமிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்காக மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்கள் என்று கூறிவிட முடியாது. முழுக்க முழுக்க ஒரு தற்காப்பு நடவடிக்கைக்காக இது போன்ற விஷயங்களை செய்கின்றனர்.
திடீரென இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டால், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் உண்மையிலேயே அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியிடம் போதுமான 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளது. எனவே தட்டுப்பாடு குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

