Last Updated:
கேரளாவில் புகழ்பெற்ற ‘கஜகௌஸ்துபம்’ பல்லாட்டு பிரம்மதத்தன் என்ற யானை, கோட்டயம் ஈராற்றுப்பேட்டை மேலம்பாறையில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தது.
கேரள திருவிழாக்களில் மிகவும் பிரபலமான சுமார் 10 அடி உயரமுள்ள இந்த ஆண் யானை, அதன் உரிமையாளரும் கேரள திருவிழா ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ராஜேஷ் பல்லாட்டு என்பவரின் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்தபோது, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மிகவும் அமைதியான குணமுடைய இந்த யானை ஆனைப்பிரியர்களால் அன்போடு ‘கஜகௌஸ்துபம்’ என்று அழைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பாரமேக்காவு கோவிலின் இரவு ஊர்வலத்தின் போது முதன்மைத் தெய்வத்தின் திடம்பை சுமந்து செல்லும் பெருமையைப் பெற்றது இந்த யானையாகும்.
பீகாரில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த யானை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவின் முக்கிய கோவில் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தது. இந்த கம்பீரமான கஜவீரனின் திடீர் மறைவு கேரள மாநில யானைப் பிரியர்கள் மற்றும் கோவில் திருவிழா அமைப்பாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து யானைக்கு கேரள மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


