Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க தவெகவுக்கு தேர்தல் வெற்றி முக்கியம். தவெகவுக்கு எதிராக சண்டை செய்ய திமுகவுக்கும் வெற்றி அவசியம். தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கௌரவ பிரச்சனை. தாராபுரம் கள நிலவரம் என்ன. வெற்றி பெற போவது யார்.
தாராபுரம் தொகுதிக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி, 16 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தாராபுரம் தொகுதிக்கு 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 29 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது. 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள். தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்கள். தவெக, அதிமுக, திமுக இடையே தான் போட்டியே.

தாராபுரத்தில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். தாராபுரம் தொகுதியில் மொத்தம் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே மாத பொது தேர்தல் முடிவுகள்
சத்யபாமா (அதிமுக) 81,000 வாக்குகள்
இந்திராணி (திமுக) 64,373 வாக்குகள்
கௌரி சித்ரா (தவெக) 46,438 வாக்குகள்
திவ்யா (நாம் தமிழர்) 6,026 வாக்குகள்
வாகை சூடுவது யார்
தாராபுரம் தொகுதி கொங்கு மண்டலத்தில் இருந்தாலும் அது திமுக வலுவாக உள்ள தொகுதி. அதிமுகவை விட திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் பாஜக மாநில தலைவராக இருந்த முருகன் அதிமுக உதவியுடன் நின்றே வெற்றி பெற முடியவில்லை. உள்கட்சி பிரச்சனை, தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜின் செயல்பாடுகள் திமுகவுக்கு எதிராக திரும்பி, அதிமுக வேட்பாளருக்கு ஜாக்பாட் அடித்தது.
தங்கள் செல்வாகை நிரூபிக்க முன்னாள் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி, சாமிநாதன், எம்பி ஆ.ராசா என ஒரு பெரிய படையையே திமுக களமிறக்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின்,
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளனர். வேட்பாளர் சுகன்யா தொகுதிக்குள் பரிட்சயமில்லை. ஸ்டாலின், உதயநிதியின் சர்ச்சை பேச்சுகளும் திமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளன.
கடும் அதிருப்தி
அதிமுக சார்பில் இறங்கியுள்ள பானுமதி தொகுதிக்குள் ஓரளவுக்கு பரிட்சயமானவர். தாராபுரம் வெற்றியை அதிமுக கௌரவ பிரச்சனையாக பார்க்கிறது. தொகுதிக்குள் கணிசமாக உள்ள கவுண்டர் சமுதாயத்தினர் தவெக வேட்பாளர் சத்யபாமா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். செல்லுமிடமெல்லாம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி களத்தில் திணறடித்தனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் களத்தில் தீவிர பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆனால் அந்த பகுதியின் முக்கிய முகமான முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் போன்ற அனுபவமிக்கவர்கள் பணியாற்றவில்லை. மகேந்திரன் தவெகவில் இணைந்துவிட்டார். கட்டமைப்பு இருந்தாலும், அதை நிர்வகித்து அறுவடை செல்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. கிராமப்பகுதி வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பவை. அங்கு அதிமுக உயிர்ப்போடு இருப்பதுதான் களத்தில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கை.
மும்முனைப் போட்டி
தவெக கடந்த பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் 3 ஆம் இடத்தை தான் பிடித்தது. போதாக்குறைக்கு இப்போது சத்யபாமாவுக்கு செல்லுமிடமெல்லாம் எதிர்ப்புகள் கிளம்புகிறது. தாராபுரத்தில் வெற்றி எளிதல்ல என்பதை விஜயே அறிவார். சீனியரான செங்கோட்டையனை ஓரம்கட்டி, அமைச்சர் அருண்ராஜை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது வரை ஏராளமான குளறுபடிகள் தவெகவில் வட்டமடிக்கின்றன.
தவெகவுக்கு பெரிய பலம் கூட்டணி. விசிக இருப்பதால் பட்டியலின வாக்கை அறுவடை செய்ய முடியும். காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வருகையும் பலமே. சிபிஐ, நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று தவெக நினைக்கிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் வரை முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் இறங்கி வேலை பார்த்துள்ளனர். கடுமையான மும்முனை போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது வருகிற 9 ஆம் தேதி தெரிந்துவிடும்.



