தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று (03) இடம்பெற்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் ஒன்பது பேர் பலியானதோடு மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் சுரங்கங்கள் மற்றும் இடிந்த கட்டடங்களுக்குள் 77 பேர் வரை சிக்கியிருப்பதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
7.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் உள்ள மலைப்பிரதேசமான ஹுவாலினில் பல மாடிகள் கொண்ட கட்டடங்கள் சாய்ந்து இருப்பது மற்றும் மேலும் பல கட்டடங்கள் இடிந்திருப்பது அங்கிருந்து வெளியான படங்கள் காட்டுகின்றன.
‘அது மிக சக்திவாய்ததாக இருந்தது. வீடு சரிந்து விழுவது போல் உணரப்பட்டது’ என்று தலைநகர் தாய்பேவில் உள்ள 60 வயது மருத்துவமனை பணியாளர் சாங் யூ லின் தெரிவித்துள்ளார். மக்கள் வேலை மற்றும் பாடசாலைக்கு செல்லும் நேரத்தில் 15.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்கம் இடம்பெற்றதோடு ஆரம்பத்தில் தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் கரைகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தலைநகர் தாய்பேவில் 50க்கும் அதிகமான முறை பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக காலநிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்வானில் 1999 ஆம் ஆண்டு சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டு 50,000க்கும் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்த 7.6 ரிச்டர் அளவான பூகம்பத்திற்குப் பின்னர் அந்நாட்டில் பதிவான சக்திவாய்ந்த பூகம்பமாக இது உள்ளது.