பேங்காக்:
தாய்லாந்து வனத்துறை அதிகாரிகள் டுரியான் பண்ணைகளிலும் தென்னந்தோப்புகளிலும் 620 சாக்கு மூட்டைகள் நிறைய காய்ந்த கஞ்சாப் பூக்களைக் கண்டுபிடித்துள்ளனர். புவெங் கான் மாநிலத்தில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.
தாய்லாந்தின் சுகாதார அமைச்சு கஞ்சாச் செடிகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை ஜூன் 26ஆம் தேதியிலிருந்து நடப்புக்குக் கொண்டுவந்தது. அதை முன்னிட்டு போதைப் பொருள் உரிமையாளர்கள் அவற்றைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
புவெங் கோங் லோங் வட்டாரத்தில் உள்ள பான் தா சி காய் டுரியான் பண்ணையில் கஞ்சா போன்ற பொருள் இருப்பதாக பெயர் குறிப்பிடாத நபர் மூலம் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் என பல தரப்பினர் விரிவான தேடல் பணிகளை மேற்கொண்டனர்.
முதல் இடத்தில் அதிகாரிகள் 85 சாக்கு மூட்டைகளில் காய்ந்த கஞ்சாப் பூக்கள் இருந்ததைக் கண்டனர்.
அதையடுத்து தென்னந்தோப்பில் மேலும் 510 சாக்கு மூட்டைகளில் காய்ந்த கஞ்சாப் பூக்கள் 25 கொத்து கஞ்சாத் தண்டுகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை யாருடையது என விசாரணை நடத்த அருகில் எந்தத் தனிநபரும் தென்படவில்லை.
ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்ட 620 சாக்கு மூட்டைகளும் பொட்டலங்களும் லாவ் லுவாங் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
பொதுச் சுகாதார அமைச்சின் அண்மைய அறிவிப்பை அடுத்து அந்தக் கஞ்சாப் பூக்கள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று வட்டாரத் தலைவர் கூறினார்.
ஜூன் 26ஆம் தேதியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட கஞ்சாப் பூக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படவேண்டும். அவற்றை விற்க உரிமம் இருக்கவேண்டும். வாங்குவதற்கு மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.
கஞ்சாப் பூக்களை வைத்திருந்தோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் அவற்றைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.