கோலாலம்பூர்:
வடக்கு தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போல நடித்து, சுமார் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 213 கிலோ ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளைக் கடத்திய மலேசிய ஆடவர் மற்றும் அவரது தாய்லாந்து மனைவி ஆகியோரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 14-ஆம் தேதி, மியூயெங் சும்போன் (Mueang Chumphon) மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து இவர்கள் பிடிபட்டனர்.
கிளந்தானைச் சேர்ந்த அந்த ஆடவர், தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் ஒரு காரில் பயணம் செய்துள்ளார். இவர்களுக்குப் பாதுகாப்பாக மற்றொரு காரில் மற்றொரு மலேசிய ஆடவர் வந்துள்ளார். சோதனையில் காரின் பின்புறத்தில் ஏழு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிகாரிகளின் சந்தேகத்தைத் தவிர்க்கவே, குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பச் சுற்றுலா செல்வது போல இவர்கள் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனையின் போது இரண்டாவது காரில் இருந்த மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைத் தேடும் பணியில் தாய்லாந்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் ஒன்பது கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தெற்கு தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் இயங்கும் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் மீது போதைப்பொருள் விநியோகம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




