தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில உள்நாட்டமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளன.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ” தாய்லாந்து உள்நாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளில் ராணுவ வீரர்களும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தாய்லாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
-Reuters-



