Last Updated:
நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி வேகமாக உயர்ந்து வருவதால், கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக, நகரின் அனைத்து 50 மாவட்டங்களும் வெள்ளப் பேரிடர் மண்டலங்களாக (Flood disaster zones) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை மதியம் தொடங்கிய இடைவிடாத இந்த கனமழையின் காரணமாக, நகரின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆரம்பத்தில், நேற்று நோங் சோக், சுவான் லுவாங் மற்றும் கான் நா யாவ் ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டுமே பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் குறையாததால் இன்று இந்த அறிவிப்பு தலைநகர் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக நகரின் கிழக்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாங்காக் பெருநகர நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 300 மி.மீ அளவுக்கான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பாங்காக் கவர்னர் சட்சார்ட் சிட்டிபண்ட் இது குறித்துப் பேசுகையில், இன்று காலை நிலவரப்படி மின் புரி பகுதியில் 274.5 மி.மீ மழையும், க்ளோங் சாம் வா பகுதியில் 273 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். கால்வாய்களில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி வேகமாக உயர்ந்து வருவதால், கால்வாய் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வாகனங்களைப் பாதுகாப்பான மேடான பகுதிகளுக்குக் கொண்டு செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த அவசரநிலையைச் சமாளிக்க பாங்காக் நிர்வாகம் தீவிர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவசரகால உதவிகளை விரைவுபடுத்தவும், வளங்களை ஒருங்கிணைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகின்றன. பாங்காக் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் தற்காலிக நிவாரண முகாம்களாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் மற்றும் முதியோர்களைக் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் மீட்கவும் சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அல்லது இழப்பீடு கோருவதற்காக, சேத விவரங்களை முறையாக ஆவணப்படுத்துமாறும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், கூடுதல் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


