கங்கார் | மார்ச் 28, 2026
மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்குச் சட்டவிரோதமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்களைப் பொது நடவடிக்கைப்படை (GOF) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை 9 மணியளவில் பாடாங் பெசார் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்திற்கு அருகிலுள்ள ஜாலான் கங்கார்-பாடாங் பெசார் சாலையில் இந்த அதிரடிச் சோதனை (‘Op Taring Bravo 1’) நடத்தப்பட்டது.
இதில் 22 முதல் 45 வயதுடைய மூன்று தாய்லாந்து ஆண்கள் பிடிபட்டனர். அவர்கள் ஓட்டி வந்த மூன்று ‘பிக்கப்’ (Pickup) ரக வாகனங்களைச் சோதனையிட்டபோது, அந்த வாகனங்களின் எரிபொருள் தொட்டிகள் (Tanks) கடத்தலுக்கு வசதியாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களிடமிருந்து சுமார் 2,015.70 ரிங்கிட் மதிப்பிலான 410 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட மூன்று வாகனங்களையும் சேர்த்து, மொத்த சொத்துகளின் மதிப்பு 2,17,015.70 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் வடக்கு மண்டலத் தளபதி எஸ்.ஏ.சி பல்வீர் சிங் (SAC Balveer Singh) கூறியுள்ளார்.
உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாகத் தாய்லாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாலும், மலேசியாவில் எரிபொருள் விலை குறைவாக இருப்பதாலும் அண்டை நாட்டில் இதற்கு அதிக தேவை உள்ளது. இதனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டவே இந்தக் கும்பல் கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாகனங்களைச் சட்டவிரோதமாக மாற்றியமைத்ததற்காகப் பெர்லிஸ் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) அந்த ஓட்டுநர்களுக்குச் சம்மன் வழங்கியுள்ளது.
இந்தக் கூட்டு நடவடிக்கை அரச மலேசிய போலீஸ் (PDRM) மற்றும் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.




