Last Updated:
புது டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணங்கள் ரயில்வே துறையினர் மூலமாகவும், காவல்துறையினர் மூலமாகவும் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன.
நாட்டின் தலைநகரான புதுடெல்லியின் ரயில் நிலையங்களில் எப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நாள்தோறும் அங்கு கோடிக்கணக்கானோர் குவிந்து வரும் நிலையில் புதுடெல்லி ரயில் நிலையம் பல்வேறு மாநில மக்கள் வந்து ரயில் மாறும் மையமாக திகழ்ந்து வருகிறது. அவ்வகையில் பிரயாக்ராஜ் செல்வதற்காக பல ஆயிரம் மக்கள் புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு காத்திருந்தனர்.
அப்போது 14 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றிருந்தது. அதேபோல் 16 ஆம் எண் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வரவேண்டியிருந்தது. அந்த இரு நடைமேடைகளில் மற்ற நடைமேடைகளை விட மிக அதிக அளவில் பயணிகள் காத்திருந்தனர். 16 ஆம் நடைமேடையில் பிரயாக்ராஜ் ஸ்பெஷல் ரயில் வருகை பற்றி அறிவிப்பு வெளியானது. அப்போது 14 ஆம் எண் நடைமேடையை வந்து அடையாத சிலர் தங்கள் ரயில் அங்கு வருவதாக நினைத்து 16 ஆவது நடைமேடைக்கு விரைந்தனர்.
14 ஆம் எண் நடைமேடையில் இருந்தவர்களில் சிலரும் 16 ஆம் எண் நடைமேடைக்கு ஓடினர். நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகளில் ஒருவர் தடுக்கி விழ, அவருக்கு முன்னும் பின்னும் இருந்த நூற்றுக்கணக்கானோர் சரிந்து விழ கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லவேண்டிய 3 விரைவு மகத் எக்ஸ்பிரஸ், ஸ்வதந்ரதா சேனானி, புவனேஸ்வர் ராஜதானி ஆகிய ரயில்களும் தாமதமானதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதமாக வந்துகொண்டிருந்ததால் வழக்கத்தை விட மூன்று மடங்கு பேர் நடைமேடைகளில் திரண்டிருந்ததும் அதிகப்படியான நெரிசலுக்குக் காரணம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரிக்க வடக்கு ரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சதிச்செயல் காரணமா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் 16ஆவது நடைமேடையில் மட்டுமே நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,
February 17, 2025 6:39 AM IST
தாமதமாக வந்த ரயில், கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பிளாட்பார்ம்… டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழப்புக்கு காரணம்