Last Updated:
Tanzania richest man | தான்சானியாவின் ஒரே கோடீஸ்வரரான முகமது தேவ்ஜி, 2018-ல் கடத்தப்பட்டு 10 நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
தான்சானியாநாட்டில் ஒரே ஒரு கோடீஸ்வரர் மட்டுமே இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நபருக்கு இந்தியாவுடன் ஆழமான தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா? ரொம்பவும் யோசிக்க வேண்டாம், நாங்களே உங்களுக்குச் சொல்கிறோம். அவர்தான் மோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் முகமது குலாமப்பாஸ் தேவ்ஜி. 49 வயதில், அவர் ஆப்பிரிக்காவின் இளைய கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், மற்றவர்களுக்கு உதவும் தாராள மனப்பான்மை கொண்டவராகவும் கருதப்படுகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தேவ்ஜி மே 8, 1975 அன்று தான்சானியாவின் சிங்கிடாவில் பிறந்தார். 1800-களின் பிற்பகுதியில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை. தேவ்ஜி அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் சர்வதேச வணிகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு சாய்ரா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். தேவ்ஜி தான்சானிய நகரமான டார் எஸ் சலாம் நகரில் வசித்து வருகிறார்.
வணிகம் மற்றும் வேலை:
1970-களில் தனது பாட்டியால் நிறுவப்பட்டு தனது தந்தையால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமான MeTL குழுமத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) தேவ்ஜி பணியாற்றுகிறார். இந்த நிறுவனம் ஜவுளி, விவசாயம், உற்பத்தி, எரிசக்தி, பெட்ரோலியம், காப்பீடு, தளவாடங்கள், வர்த்தகம், ரியல் எஸ்டேட் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வணிகங்களைக் கொண்டுள்ளது.
MeTL நிறுவனம் தான்சானியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.3% பங்களிக்கிறது மற்றும் 34,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. இந்நிறுவன குழுமத்தின் முக்கிய சொத்துக்களில் 21 ஆம் நூற்றாண்டு ஜவுளி, ராயல் சோப் மற்றும் டிடெர்ஜெண்ட், MeTL அக்ரோ, ஸ்டார் ஆயில் தான்சானியா மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் லிக்விட் ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனம் 11 ஆப்பிரிக்க நாடுகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
அரசியல் மற்றும் கடத்தல் சம்பவம்:
2005 முதல் 2015 வரை சிங்கிடா அர்பன் தொகுதியில் தேவ்ஜி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் தனது தொழில் மற்றும் தொண்டுசேவைகளில் கவனம் செலுத்துவதற்காக 2015-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அக்டோபர் 2018 -ல், டார் எஸ் சலாமில் உள்ள கொலோசியம் ஹோட்டலுக்கு வெளியே காலை உடற்பயிற்சியின் போது ஆயுதமேந்திய துப்பாக்கிதாரிகளால் தேவ்ஜி கடத்தப்பட்டார். 10 நாட்களுக்குப் பிறகு எந்த மீட்புத் தொகையும் செலுத்தப்படாமல் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, தேவ்ஜியின் சொத்து மதிப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.19,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் தான்சானியாவின் ஒரே பில்லியனர் மற்றும் ஆப்பிரிக்காவின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
April 18, 2025 5:55 PM IST


