Last Updated:
தவெகவுக்கு தமிழ்நாட்டில் போட்டியிட பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதேபோல், புதுச்சேரியிலும் அக்கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கின்றன. இதற்காக அம்மாநிலங்களில் இருக்கும் மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதேபோல், தேர்தல் ஆணையமும் ஐந்து மாநிலத் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
தேர்தலில் கூட்டணி, தேர்தல் வாக்குறுதி போன்றே சின்னங்களும் முக்கிய பங்காற்றும். அந்தவகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக கொண்டு களத்திற்கு வந்திருக்கும் விஜய்யின் தவெகவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் போட்டியிட விசில் சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் தங்கள் சின்னத்தை சுவர் விளம்பரம் செய்தும், சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் தவெக தரப்பில் பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தது.
அந்த அடிப்படையில், புதுச்சேரியில் தவெக போட்டியிட பொதுச் சின்னத்தை ஒதுக்கியுள்ள தேர்தல் ஆணையம், அந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டைப்போல், அங்கும் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இரண்டு இடங்களிலும் பொதுச் சின்னமாக ஒரே சின்னம் கிடைத்ததைத் தொடர்ந்து, தவெக தலைமையும், நிர்வாகிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Puducherry (Pondicherry)


