சென்னை, தமிழக வெற்றிக் கழகம் அதன் கட்சி அமைப்பை மற்ற கட்சிகளை விட முற்றிலும் மாறுபட்ட, ஒரு புதிய நிர்வாக முறையில் கட்டமைத்துள்ளது.மற்ற அரசியல் கட்சிகள் பின்பற்றாத த.வெ.க.வின் தனித்துவமான புதிய வழிமுறைகளில் செயல்படுகிறது.
வழக்கம்
தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பழமையான கட்சிகள் வருவாய் மாவட்டங்கள் அல்லது நாடாளுமன்ற தொகுதிகளை அடிப்படையாக கொண்டே தங்களின் கட்சி மாவட்டங்களை பிரிப்பது வழக்கம். ஆனால், த.வெ.க. அடிமட்ட தொண்டர்களை நேரடியாக சென்றடைய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியையும் முழுமையாக உள்ளடக்கியவாறு தங்களின் கட்சி மாவட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.
137 சிறிய உட்கட்சி மாவட்டங்கள்
தவெக பெரிய மாவட்டங்களாக வைத்திருக்காமல், 137 சிறிய உட்கட்சி மாவட்டங்களாக பிரித்துள்ளதால், ஒவ்வொரு பகுதியின் தேவைகளையும், த.வெ.க. மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் கட்சியின் தலைமை மிக எளிதாக கண்காணிக்க முடிகிறது.
ஒப்படைப்பு
புதிதாக பிரிக்கப்பட்ட கட்சி மாவட்டங்களின் நிர்வாக பொறுப்புகள் நேரடியாக அந்தந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளே கட்சியின் மாவட்ட செயலாளர்களாகவும் செயல்பட்டு, கட்சி பணிகளையும் மக்கள் பணிகளையும் ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கான செயலாளர்களாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்டத்திற்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. நெல்லை தென்கிழக்கு மாவட்டத்திற்கு ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. நெல்லை மத்திய மாவட்டத்திற்கு மரியஜான்நெல்லை வடக்கு மாவட்டத்திற்கு ஆர்.எஸ்.முருகன் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டத்திற்கு அபிஷேக் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்களின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்சி பணிகளை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும், வரும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.



