ஒரு ஆணின் அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியதால், மத்திய தலைநகரில் மைக்கார்டு மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தனது மைக்கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ரிம14,000 இழப்புகுறித்த அந்த நபரின் புகாரை விசாரித்தபோது, தேசிய பதிவுத் துறை (NRD) போலியான மைக்கார்டு செயல்பாட்டைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கின் விளைவாக, மைக்கார்டு மோசடி நடவடிக்கைக்கு மூளையாகச் செயல்பட்ட 31 வயது தற்காலிக குடியிருப்பாளர் கைது செய்யப்பட்டதாக அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிலாங்கூர், அம்பாங்கில் உள்ள பாண்டன் இந்தாவில் உள்ள ஒரு வீட்டில் NRD குழுவினர் நடத்திய சோதனையில், போலி அடையாள அட்டைகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
“சோதனையின்போது, NRD போலி மைக்கார்டுகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் ஒரு முழுமையான உபகரணங்களைக் கைப்பற்றியது, அதில் ஒரு மடிக்கணினி, அச்சுப்பொறி, லேமினேட்டிங் இயந்திரம், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆறு மைக்கார்டுகள் அடங்கும்”.
“சோதனைகளில் இரண்டு மைக்கார்டுகள் வேறு நபர்களுக்குச் சொந்தமானது என்று கண்டறியப்பட்டது, மீதமுள்ள நான்கு போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
சந்தேக நபர் தனியாகச் செயல்பட்டதாக நம்பப்படுவதாக சைஃபுதீன் கூறினார், ஆனால் அதிகாரிகள் ஒரு பெரிய வலையமைப்பின் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை.
போலி அடையாள அட்டைகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு தலா ரிம 4,000 முதல் ரிம 5,000 வரை விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
மார்ச் 11 அன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த நபர்மீது தேசிய பதிவு விதிமுறைகள் 1990 (திருத்தம் 2007) இன் விதி 25(1)(e) இன் கீழ் போலி மைக்கார்டுகள் மற்றும் மற்றவர்களின் அடையாள அட்டைகளை வைத்திருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டதாக சைஃபுதீன் கூறினார்.
அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 13 மாத சிறைத்தண்டனையும் ரிம 3,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.