இந்தியாவில் நடைபெறும் முதல்தர டி-20 கிரிக்கெட் தொடரில் புதுச்சேரி சார்பில் பங்கேற்க முடியாத ஆத்திரத்தில், பந்துகளை விளாசுவதற்காக பயன்படுத்திய பேட்டை பயிற்சியாளருக்கு எதிராக மூன்று வீரர்கள் திருப்பியுள்ளனர். கொலை செய்யும் நோக்கில் தாக்கப்பட்டதில், பயிற்சியாளரின் நெற்றியில் இருபது தையல்கள் போடப்பட்டுள்ளன. தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு கிரிக்கெட் சங்க நிர்வாகியின் தூண்டுதலின்பேரில் கொலைபாதக செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி டிராபி உள்ளிட்ட முதல்தர கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் அணிகள் பங்கேற்கும். இந்த தொடர்களில் அசத்தும் வீரர்களே, இந்திய தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
இந்த நிலையில் சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்கும் புதுச்சேரி அணி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், சில வீரர்களை வேண்டும் என்றே புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு, புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் தலைமை பயிற்சியாளரான எஸ்.வெங்கட்ராமனே காரணம் என கூறப்பட்டது. கடந்த 8 ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள கிரிக்கெட் சங்க வளாகத்தில் வெங்கட்ராமன் இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த மூன்று வீரர்கள் அவரை கிரிக்கெட் பேட்டால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அவரின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தோள்பட்டையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நெற்றியில் பட்ட காயத்திற்கு 20 தையல்கள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வெங்கட்ராமன், சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கிரிக்கெட் வீரர்கள் கார்த்திகேயன், அரவிந்தராஜ் மற்றும் சந்தோஷ் குமரன் ஆகியோர் தான் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். அவர்களை புதுச்சேரி அணியில் சேர்க்காததற்கு தானே காரணம் எனக் கூறி கொலை செய்யும் நோக்கில் பலமாக தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், பாரதிதாசன் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் சந்திரன் என்பவரின் தூண்டுதலின்பேரில் தான் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
தான் உயிருடன் இருந்தால் மூன்று வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்காது என கொம்பு சீவி விட்டதாகவும் சாடியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கிரிக்கெட் வீரர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனிடையே, வெங்கட்ராமனின் குற்றச்சாட்டுக்கு பாரதிதாசன் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க தலைவர் செந்தில் குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜூனியர் அணியின் தலைமை பயிற்சியாளரான வெங்கட்ராமன் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர், கிரிக்கெட் வீரர்களை ஆபாசமான வார்த்தைகளை திட்டுவதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும் சாடியுள்ளார். குறிப்பாக, பாரதிதாசன் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் சந்திரன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வெங்கட்ராமன் கூறியதாகவும் செந்தில் குமாரன் கூறியுள்ளார். புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடு நடைபெற்று வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் மீதான குற்றச்சாட்டு மீது பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது. சையது முஷ்டாக் அலி தொடருக்கான புதுச்சேரி அணியில் புறக்கணிக்கப்பட்டதால் சீனியர் வீரர்கள் மூன்று பேர், தலைமைப் பயிற்சியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry (Pondicherry)
December 10, 2025 7:39 PM IST

