மேம்பாலம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கார். அதில் மூன்று சடலங்கள். இந்த சம்பவம்தான் கடந்த சில நாட்களாக டெல்லியை உலுக்கிய செய்தியாக இருந்தது. யார் அந்த மூவர், அவர்களை கொன்றது யார்? என விசாரித்தபோது கம்ரூதின் பாபாவின் சித்து விளையாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பண இரட்டிப்பு ஆசை காட்டி மூவரை தீர்த்துக் கட்டிய போலி பாபாவை போலீசார் தூக்கியது எப்படி?
தலைநகர் டெல்லியில் பீராகர்கி மேம்பாலம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்த காரில் இருந்து 3 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்கள் ரன்தீர், சிவ்நரேஷ் மற்றும் லட்சுமி என்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் அனைவரும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், ஒரே காரில் உடலில் எந்தவித காயங்களும் இல்லாமல் செத்துக் கிடந்தது எப்படி? என்பது புரியாத போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். டெல்லியின் நங்லி டெய்ரி, பாப்ரோலா மற்றும் ஜஹாங்கிர்புரியைச் சேர்ந்த மூவரின் குடும்பத்தினரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள், தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த காரணமும் இல்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு மேலும் சிக்கலானது. இதையடுத்து உடல்களுடன் கார் நின்றிருந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் உயிரிழந்த மூன்று பேருடன் நான்காவதாக ஒரு நபர் அமர்ந்திருப்பது தெரியவந்தது. யார் அந்த நபர்? அவர் மட்டும் எங்கே போனார்? என தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கினர்.
இறந்துபோன மூவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான கம்ருதின் பாபா என்பவருடன் தொடர்பில் இருந்து வந்தது மூவரும் ஒரு புள்ளியில் இணைந்து இருப்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து யார் அந்த கம்ருதின் பாபா என போலீசார் தேட ஆரம்பித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் வசித்துவரும் கம்ருதீன், தாந்த்ரீக மையம் என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த கம்ருதீன் பாபா, பணமழை பொழிய வைக்கும் தன்வர்ஷா என்கிற சடங்கு செய்வதில் பிரபலமானவர்.
அதாவது ஒரு லட்சம் கொடுத்தால் 2 லட்சம், 2 லட்சம் கொடுத்தால் 3 லட்சம் என தனது தனித்துவமான சடங்குகள் மூலம் மாற்றிக் காட்டுவதாக சவால் விடுப்பார் இந்த பாபா. அவ்வாறு வசூல் வேட்டை நடத்தி, தனது மாந்திரீக மையத்தை பெரிதாக வளர்த்திருக்கிறார் இந்த போலி பாபா.
அதன்படி பணத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்களைத்தான் காரில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்திருக்கிறார் பாபா. அனைவருக்கும் மது மற்றும் குளிர்பானங்களை குடிக்க கொடுத்த பாபா, தான் மந்திரித்து எடுத்து வந்திருப்பதாக கூறி விஷம் கலந்த லட்டுக்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு அனைவரும் சாப்பிட அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் உயிரிழந்து விட்டனர்.
கம்ருதீன் இதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இதுவரை சுமார் 6 முதல் 7 பேரை அவர் இதே பாணியில் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால் விசாரணையை தொடர்ந்து முடுக்கிவிட்டுள்ளனர்.

