பீஜிங்,சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. திபெத்திய புத்த மத துறவியான 14-வது தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை.
இந்நிலையில், தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் 6-ந்தேதி(நேற்று) கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்படி பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் தலாய் லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், மூத்த இந்திய அரசு அதிகாரிகள் தலாய் லாமாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனிடையே தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“14-வது தலாய் லாமா அரசியல் ரீதியாக நாடு கடத்தப்பட்டவர். அவர் நீண்ட காலமாக பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மதத்தின் பெயரில் சீனாவிடம் இருந்து திபெத்தை பிரிக்க முயன்றார்.
திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா மிகுந்த அக்கறையுடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும். சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட இந்த பிரச்சினையை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். இது தொடர்பாக இந்தியாவிடம் சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.