Last Updated:
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் 1995-2014 காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.
தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக கோயில் முன்னாள் ஊழியர் ஒருவர் புகாரளித்திருந்தார். சிறுமிகள், பெண்கள் என பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடல்களைத் தோண்டும் பணியை அம்மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது.. அந்த வகையில், ஆறாவதாக தோண்டப்பட்ட இடத்தில் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் முதன்முறையாக எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் வழக்கு தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தர்மஸ்தலா குளத்தைத் தவிர்த்து, நேத்ராவதி ஆற்றுக்கு அருகிலுள்ள ஒரு வனத்தில் 13 இடங்களில் குறி வைத்து உடல்களை தோண்டி எடுக்கும் பணியை சிறப்பு புலனாய்வுக் குழு மேற்கொண்டது.
நேற்று தோண்டும் பணியின்போது, கனமழை குறுக்கிட்டதால் தோண்டும் பணியில் சிக்கல் எழுந்தது. 2 அல்லது 3 அடி தோண்டுவதற்கு முன்பே தண்ணீர் தேங்கியதால் சுணக்கம் ஏற்பட்டது. வழக்கின் சாட்சியாக இருக்கும் முன்னாள் ஊழியரையும் நேரில் அழைத்து வந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளன. தோண்டும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தால் தர்மஸ்தலாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
July 31, 2025 9:13 PM IST