Last Updated:
சத்தீஸ்கர் ஜாஞ்ச்கிர் சம்பா குர்கோட் கிராமத்தில் தர்பூசணி சாப்பிட்ட 4 சிறுவர்களில் 15 வயது அகிலேஷ் உயிரிழப்பு, 3 பேர் ஆபத்து, காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
தர்பூசணி சாப்பிட்ட நிலையில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து விடுபடவும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் கோடைக்கு ஏற்ற பழங்களை மக்கள் வாங்கி உட்கொள்கின்றனர். தற்போது இதில் முதன்மை வகிப்பது தர்பூசணி. தர்பூசணிகள் பீஸ் பீஸ் ஆக வெட்டப்பட்டு கண்களை கவரும் வகையில் ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலர் முழு பழத்தையும் வீட்டிற்கு வாங்கிச் சென்று தேவைப்படும் நேரத்தில் வெட்டி சாப்பிடுகின்றனர்.
இதேபோன்ற வீட்டில் வைத்திருந்த தர்பூசணியை வெட்டி சாப்பிட்ட நான்கு சிறுவர்களுக்குத் தான் ஒவ்வாமை ஏற்பட்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கரில் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உற்றார் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பின்னர் பெற்றோருடன் வந்த 4 சிறுவர்கள் மட்டும் அதே ஊரில் உள்ள தாய்மாமாவின் வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவர்கள் வீட்டில் இருந்த தர்பூசணியை கட் பண்ணி சாப்பிட்டுள்ளனர். பின்னர் அனைவரும் விளையாட சென்றுள்ளனர். இரவு நேரத்தில் தர்பூசணி சாப்பிட்ட 4 சிறுவர்களுக்கும் வாத்தி, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் உடல் சோர்வாகி காணப்பட்டதால் திங்கட்கிழமை காலையில் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதில் 15 வயதான அகிலேஷ் என்ற சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும், 4 வயதான ஸ்ரீதிவார், 12 வயது பிண்டு திவார் மற்றும் 13 வயதான ஹிதேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே சிறுவன் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தடயவியல் பரிசோதனைக்காக உடல் உள்ளுறுப்பு மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டில் இருந்த மற்றொரு தர்பூசணியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், உடற்கூராய்வில் அவர்கள் தர்பூசணியில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது உறுதியானது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் தர்பூசணி சாப்பிட்ட நிலையில் சிறுவன் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் சம்பவத்து அன்று காலையிலேயே தர்பூசணி வெட்டி துண்டு துண்டாக வைக்கப்பட்டது தெரியவந்தது.
பல மணி நேரம் கழித்து மாலையில் தான் சிறுவர்கள் அனைவரும் அதை சாப்பிட்டுள்ளனர். இதனால், தர்பூசணி கெட்டுப்போயிருக்கலாம் என கூறப்படுகிறது. கெட்டுப்போன பொருளை சாப்பிட்டதால் சிறுவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதும் உடற்கூராய்வு முடிவில் தான் 15 வயது சிறுவனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். தர்பூசணி இயற்கை நிறத்தைவிட அதிக சிவப்பாக தெரிவதற்காக சில நேரங்களில் ‘எரித்ரோசின்’ போன்ற வண்ணங்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
விரைவில் பழுக்க வைப்பதற்காக ‘கால்சியம் கார்பைடு’ அல்லது ‘ஆக்சிடாசின்’ போன்ற ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுபோன்ற ரசாயனம் கலந்த தர்பூசணியை உட்கொண்டால் உடல் உபாதை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் சத்தீஸ்கரில் தர்பூசணி சாப்பிட்ட 4 சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முடிவில் தான் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 12, 2026 10:16 PM IST

