தரையை தட்டும் வங்கி பங்குகள்.. பீதியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. என்ன நடக்குது..?
இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாகத் தொடர் ஏறுமுகத்தில் இருந்த காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் இந்த நிம்மதி ஒரு வீக்எண்ட்-க்கு கூட தாங்கவில்லை என்பது தான் பெரும் சோகமான விஷயம்.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது, இன்றைய வர்த்தகத்தில் பெரும் சரிவை எதிர்கொண்ட இரண்டு முக்கியமான துறை வங்கி மற்றும் ஐடி சேவைத் துறை குறியீடுகள் தான்.

மும்பை பங்குச்சந்தையில் Bankex, Focused IT ஆகிய இரண்டும் பெரும் சரிவைப் பதிவு செய்துள்ளது. இரண்டு துறைக்கும் முக்கியமான தொடர்பு என்னவென்றால் கடந்த 2 வாரங்களாக வங்கி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி 5 சதவீதம் வரையிலும், ஹெச்டிஎப்சி வங்கி 2 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 1 சதவீதமும், கோட்டார் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை தலா 1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. நிஃப்டி பேங்க் குறியீடு 1 சதவீதம் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணம் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் தான் பெரும்பாலான வங்கிகளின் Net interest margin (NIM) இக்காலாண்டில் குறைந்துள்ளது அல்லது தேக்கம் அடைந்துள்ளது.
இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தாலும், இதற்கான காரணம் என்ன என்பது தான் தற்போதைய பிரச்சனை.
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்தவும், அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரிக்கவும் ஆர்பிஐ மற்றும் மத்திய அரசின் இணைந்து FCNR-B வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தியது மூலம் பெரும்பாலான தனியார் வங்கிகள் அதிகப்படியான வைப்புத் தொகையைப் பெற்றது.
ஆனால் இந்த தொகை அதிக வட்டியில் பெறப்பட்டதால் வங்கிகளின் Net interest margin நீண்ட கால அடிப்படையில் குறையும் என கணிக்கப்படுகிறது. Net interest margin என்பது வங்கிகள் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி தொகையும், டெபாசிட்-க்கு வழக்கும் வட்டிக்கும் மத்தியிலான வித்தியாசம்.
ஒவ்வொரு வங்கிக்கும் இது முக்கிய அளவு கோளாக இருக்கும் வேளையில் டெபாசிட்-க்கு அதிக வட்டியை கொடுக்க வேண்டிய சூழ்நிலை FCNRB வைப்பு நிதி மூலம் தனியார் வங்கிகளுக்கு உருவாகியுள்ளது.
உதாரணமாக ஆக்சிஸ் வங்கி FCNRB வைப்பு நிதி மூலம் 10.62 பில்லியன் டாலர் தொகைடை பெற்றது, இதன் வாயிலாகக் கடந்த ஆண்டு 3.80 சதவீதமாக இருந்த Net interest margin இந்த செப்டம்பர் காலாண்டில் 3.46 சதவீதமாக குறைந்து 0.34 சதவீத இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
இதனால் FCNRB வைப்பு நிதி மூலம் பெரும் தொகை பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இந்த பாதிப்பு உடனடியாகவோ அல்லது அடுத்த காலாண்டிலோ எதிரொலிக்கும் எனக் கணிக்கப்பட்டது மூலம் வங்கி பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

