தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. முதுகுவலி காரணமாக ரோகித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா உடல்தகுதி பிரச்சனையால் ஒரு நாள் ஆட்டத்தை இழந்து இருப்பது இதுவே முதல் முறை. இந்திய அணியில் கடந்த சில வாரங்களாக காயம் போன்ற சிக்கல்கள் இருந்தபோதிலும் ரோகித் தொடர்ந்து காயம் அடையாமல் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தார். ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, ரோகித் 103 ரன்களை அடித்தார்.
இந்தத் தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இதுவாகும். சதம் அடித்த ஒரு நாளுக்குப் பிறகு காயத்தால் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் 259 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றது. அஸ்வின் உடன் இணைந்து பும்ரா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். புதிய பந்தை அஸ்வினிடம் கொடுத்து இன்னிங்ஸை தொடங்கிய பும்ராவின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து இரண்டாவது ஓவரிலேயே பென் டக்கெட் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த ஓவரை வீசியது அஸ்வின்தான்.
தொடர்ந்து 103 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து. இதில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரை அஸ்வின் வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் 2 ரன், ஆலி போப் 19 ரன்கள், ஸாக் கிராலி 0, பென் டக்கெட் 2 ரன்கள், போக்ஸ் 8 ரன்கள் என 5 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடி 39 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தினார். இதனால், 6 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.