ஈப்போ:
இங்குள்ள தாமான் டேசா தம்பூன், பெர்சியாரான் டேசா தம்பூன் 4 இல் இன்று அதிகாலை நேரிட்ட கொடூரத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக RM5,000 ஆரம்பக் கட்ட நிதியுதவியை வழங்கியுள்ளார்.
பிரதமரின் இக்கருணை நிதியை, தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் சார்பில் அவரது சிறப்பு அதிகாரி முகமட் ஹைருல் அமீர் சாப்ரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பிரதிநிதியான ராஜா இக்வான் ஹாதி ராஜா அகமத் என்பவரிடம் நேரடியாக ஒப்படைத்தார்.
மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்தின் துயரத்தைப் போக்குவதே இந்த முதற்கட்ட நிதியுதவியின் நோக்கம் எனத் தெரிவித்த முகமட் ஹைருல் அமீர், நாளை பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU) சம்பவ இடத்தைப் பார்வையிட்டுச் சேத மதிப்பீடு செய்யும் என்றார்.
“வீட்டின் சேதத்தைப் பார்க்கும்போது, அதைச் சீரமைக்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். எனவே, வீடு முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை அக்குடும்பத்தினருக்குத் தேவையான தற்காலிக இருப்பிட வசதிகளைச் செய்து தர நாடாளுமன்ற சேவை மையம் தயாராக உள்ளது.” என்றும் அவர் சொன்னார்.
மேலும், நலன்புரித் துறை (JKM) மற்றும் பிற அரச நிறுவனங்களுடன் இணைந்து அக்குடும்பத்தினருக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஈரடுக்கு மாடி வீட்டில ஏற்பட்ட இத்தீ விபத்தில் ராஜா அகமத் ராஜா அலி (70), அவரது மனைவி சைதுன் முகமத் (64) மற்றும் அவர்களின் பேரன் நிக் அப்துர்ரஹ்மான் அசிமின் ஹாரித் ஹெலால் (18) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டின் வாகன நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 47 வயது ராஜா இக்வான் ஹாதி என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தம்பூன் மற்றும் ஈப்போ தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



