தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளத்தில் இருந்து பெண் ஓட்டுநரை மீட்ட தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் இஸ்தானாவுக்கு அழைக்கப்படலாம் என்று நாம் பதிவிட்டு இருந்தோம், இந்நிலையில், 7 பேரும் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்திக்க அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்தது.
தமிழ் ஊழியர்களுக்கு அழைப்பு
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இஸ்தானா வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்படும்.
இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியர்களுடன் சேர்த்து, மற்ற விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் CNA -விடம் தெரிவித்தது.
அவர்கள்…
- பிச்சை உடையப்பன் சுப்பையா (47)
- திரு வேல்முருகன் முத்துசாமி (27)
- திரு பூமலை சரவணன் (28)
- திரு கணேசன் வீரசேகர் (32)
- திரு போஸ் அஜித்குமார் (26)
- திரு நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25)
- திரு சதாப்பிள்ளை ராஜேந்திரன் (56)
மேலும், இஸ்தானாவில் அதிபருடன் கலந்துரையாட அவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் கூறியது.
உள்ளூர் தொண்டு அமைப்பு ItsRainingRaincoats அவர்கள் 7 பேருக்கும் நிதி திரட்டியது. அது நிர்ணயித்த S$70,000 என்ற இலக்கை தாண்டி நிதி திரண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி திரட்ட உதவிய தள செலவுகளைத் தவிர்த்து, அனைத்து நிதியும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடையே சமமாக பிரிக்கப்படும்.
மேலும் ஒவ்வொரு பங்கும் முழுமையாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் அது கூறியது.