Last Updated:
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் இந்தியாவின் பெருமிதம், காசி தமிழ் சங்கமம், இயற்கை வேளாண்மை மாநாடு குறித்து உரையாற்றினார். சில நாட்களுக்கு முன்பு, கோவையில் நடந்த இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்ற அனுபவத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்தார்.
தமிழ் கலாசாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுடன் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 128ஆவது பகுதியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், வாரணாசியில் வரும் 2 ஆம் தேதி 4ஆவது காசி தமிழ் சங்கமம் தொடங்கும் என்று தெரிவித்தார். அதில் பேசும்போது, “உலகின் மிகப் பழமையான மொழி, உலகின் மிகவும் தொன்மையான நகரங்களிலே ஒரு நகரம் என்ற இந்த இரண்டின் சங்கமம் என்பது எப்போதுமே மிகவும் அற்புதமானதாக இருக்கும். நான் காசி தமிழ்ச் சங்கமம் பற்றித் தான் பேசுகிறேன். டிசம்பர் மாதம் 2ஆம் தேதியன்று காசியின் நமோ காட்டில், காசி தமிழ்ச் சங்கமத்தின் நான்காம் பதிப்பு தொடங்கப்பட இருக்கிறது. இந்த முறைக்கான காசி தமிழ்ச் சங்கமத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது, தமிழ் கற்கலாம், என்பதே அது.
யாருக்கெல்லாம் தமிழ் மொழி மீது ஈடுபாடு இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் காசி தமிழ்ச் சங்கமம் மகத்துவம் வாய்ந்த ஒரு மேடையாக ஆகியிருக்கிறது. காசிவாழ் மக்களிடம் எப்போது பேசினாலும், காசி தமிழ்ச் சங்கமத்தின் அங்கமாக ஆவது அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இங்கே அவர்களுக்கு புதிய கற்றல், புதியவர்களோடு பழகுதல் ஆகியவற்றுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முறையும் கூட காசிவாசிகள் பெரும் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் தமிழ்நாட்டிலிருந்து வரக்கூடிய தங்களுடைய சகோதர சகோதரிகளை வரவேற்க மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.
காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன். அதோடு கூடவே, இப்படிப்பட்ட மேலும் மேடைகளைப் பற்றிச் சிந்தியுங்கள், இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணர்வு மேலும் பலப்படும். இந்த இடத்திலே நான் மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்.” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சில நாட்களுக்கு முன்பு, கோவையில் நடந்த இயற்கை விவசாய மாநாட்டில் பங்கேற்ற அனுபவத்தையும் பிரதமர் மோடி பகிர்ந்தார். அதில், “சில நாட்கள் முன்பாக, இயற்கை வேளாண்மை பற்றிய ஒரு பெரிய மாநாட்டிலே பங்கெடுக்க நான் கோயமுத்தூர் சென்றிருந்தேன். தென் பாரதத்திலே இயற்கை வேளாண்மை தொடர்பாக நடைபெற்றுவரும் முயற்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நான் கவரப்பட்டேன்.
பல இளைஞர்கள், மெத்தப்படித்த தொழில்வல்லுநர்கள் இப்போது இயற்கை வேளாண்துறையை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். அங்கே இருக்கும் விவசாயிகளோடு நான் உரையாடினேன், அவர்களின் அனுபவத்தை அறிந்து கொண்டேன். இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியங்களின் அங்கமாக இருந்து வந்திருக்கிறது, இந்தப் பூமித்தாயைக் காத்தளிக்க நாம் இதற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துவர வேண்டும் என்பது நம்மனைவரின் கடமையாகும்.” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 30, 2025 10:27 PM IST


