சென்னை:
தமிழ்நாட்டில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணியின் பாலியல் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ‘தமிழக வெற்றி கழகத்தின்’ தலைவரும் நடிகருமான விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
85 வயதான பிரபல தொழிலதிபர் ஆர். வீரமணி, பல சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த அதிர்ச்சிளிக்கும் வீடியோ ஆதாரங்களைக் காவல் துறையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அவர் மீது போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
“இந்தக் கொடூரமான குற்றங்களுக்குத் துணைபோன சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கே. கணேசன் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.”
இச்சம்பவம் தொடர்பாக முன்னரே புகார்கள் பெறப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கைக் கிடப்பில் போட்டு மூடிமறைக்க முயன்றதாக எழுந்த தீவிரக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சில உயர் காவல் துறை அதிகாரிகள் உடனடியாகக் ‘காத்திருப்போர் பட்டியலுக்கு’ (Waiting List) மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் எங்கு தப்பியோடினாலும் அல்லது எத்தகைய சக்திவாய்ந்த பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



