Last Updated:
தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களை திமுகவினர் அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில், அடுத்த வாரம் வியாழக்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முசாஃபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்களை இளவரசர்களாக நினைத்துக் கொள்ளும் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ், பிகாரில் பொய் வாக்குறுதி அளிக்கும் கடையைத் திறந்து இருப்பதாக விமர்சித்துள்ளார்.
பிகாரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தோல்வியை சந்திக்க இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மகாகத்பந்தன் கூட்டணி அளித்த வாக்குறுதிகளை அவர்களின் ஆதரவாளர்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறிய பிரதமர், பிகார் மக்களை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
அதேபோல், சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பிகார் மக்களை பஞ்சாபிற்குள் அனுமதிக்க மாட்டோம் என ஒரு பேரணியின்போது அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் கூறியதாகக் குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மகள், கைத்தட்டி அதை ஆமோதித்ததாகவும் கூறினார்.
இதேபோல, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பிகார் தொழிலாளர்கள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக ஒடிசா சட்டமன்றத் தேர்தலின்போது, புரி ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், பிகார் தேர்தலில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக நாளந்தாவில் பரப்புரை செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திரா காந்தி யாரிடமும் அடிப்பணியவில்லை எனவும், ஆனால் நரேந்திர மோடி கோழை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
பிகார் மக்களின் கடின உழைப்பால் துபாய் நகரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராகுல் காந்தி, பிகார் இளைஞர்களுக்கு சொந்த மண்ணில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். பிகார் இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி அலைய வேண்டிய சூழல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
October 30, 2025 9:18 PM IST
“தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்களுக்கு அவமதிப்பு” – பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு


