• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? – நியூஸ்18க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்

GenevaTimes by GenevaTimes
April 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? – நியூஸ்18க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேள்வி: ஒரு தேசியக் கட்சியினுடைய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதற்கான சவாலாக எதைப் பார்க்கிறீர்கள்?

பதில்: இப்போது இருக்கும் திமுக ஆட்சியின் மீது அதிருப்திகள் உள்ளது. அதை மக்களிடம் கொண்டு சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே சவாலாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் அதிமுகவில் நீண்ட நாட்கள் பயணித்த ஒருவர். நீங்கள் பாஜகவில் இணைந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவுடன் நீங்கள் தலைவரான அதே நாளிலேயே கூட்டணி அமைந்துள்ளது. எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நான் அதிமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தேன். கட்சியை விட்டு வெளியேறி விட்டோமே என்ற நினைப்பு இருந்தாலும், தேச நலன் இருப்பதால் தேசியக் கட்சி மீது மிகப்பெரிய அன்பு இருந்தது. அதன்பிறகு பாஜகவிலேயே உழைத்து சட்டமன்ற உறுப்பினராகி உள்ளேன். இரண்டு முறை பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக இருந்து வெற்றி வாய்ப்பு இல்லையென்றாலும், பாஜகவின் கட்சித் தேர்தலில் மாநிலத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அதே நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டணி முடிவானது ஒரு சந்தோஷமான விஷயம்.

கேள்வி: ஒரு தொலைபேசி அழைப்பில் கூட்டணி உறுதி செய்யலாம் எனக் கூறினீர்கள். அந்த அழைப்புக்கான தேவை கூட இல்லாமல் கூட்டணி அமைந்துவிட்டதோ?

பதில்: நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன அந்தக் கருத்து மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்டது. அண்ணன் இபிஎஸ் எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் ஒன்றாகப் பணியாற்றி இருக்கிறோம். அமைச்சரவையில் இருந்திருக்கிறோம். நெருங்கிய நண்பர் என்பதால் சென்று பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்ற அடிப்படையில் தான் கூறினேன்.

கேள்வி: இப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. ஏற்கனவே 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெறமுடியாத நிலையில் இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்வி உள்ளதே?

பதில்: 2021 தேர்தலில் வெற்றி பெற முடியாத கூட்டணி என்று சொல்ல முடியாது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்கள், புதிதாகச் சேர்ந்தவர்கள் என அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, என்னைப் பொறுத்தவரையில் நிச்சயம் 140 – 150 இடங்களுக்கு மேலாக வெற்றி பெறுவோம்.

கேள்வி: அதைத் தான் நீங்கள் இலக்காக வைத்துள்ளீர்களா?

பதில்: எங்கள் இலக்கு ஆட்சி அமைக்க வேண்டும். திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே.

கேள்வி: ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியா என்ற கேள்வி வந்துள்ளதே. அதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில்: உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதே தேசிய ஜனநாயக கூட்டணி என்பதே.

கேள்வி: எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். அவர் தலைமையில் தான் கூட்டணி என்பதை அமித் ஷா கூறியுள்ளார். ஆனால் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதும் கூட்டணி ஆட்சி தான் என்று பொருள்படுகிறது. இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி மட்டும்தான், கூட்டணி அமைச்சரவை இல்லை எனக் கூறுகிறார். அப்படித் தான் பேசப்பட்டதா?

பதில்: தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என அமித்ஷா பேசியது தான் என்னுடைய கருத்தும்.

கேள்வி: அமைச்சரவையில் பாஜக பங்கேற்குமா?

பதில்: அதுகுறித்து நாம் இப்போது சொல்ல முடியாது. அன்று எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை கட்சிகள் உள்ளது என அனைத்தையும் வைத்துத் தான் பேச முடியும்.

கேள்வி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரை கூட்டணி ஆட்சி என்பது இருந்ததில்லை. ஆனால் 1980ஆம் ஆண்டில் கூட்டணியாக ஆட்சி அமைப்போம் எனக் கூறித் தேர்தலைச் சந்தித்தார்கள்.

பதில்: அந்தத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி இருந்தது. யார் முதலமைச்சர் என்பதைத் தான் தான் கூறுவேன் என இந்திரா காந்தி அம்மையார் கூறினார்கள். ஆனால் அண்ணன் இபிஎஸ் தான் முதலமைச்சர் என்று இன்று கூறியுள்ளோம்.

இதையும் படிக்க: ”தேசிய ஜனநாயக கூட்டணி 150 இடங்களை வெல்லும்” – களம்18 நிகழ்ச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கேள்வி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக – அதிமுக என இரு துருவ அரசியல் தான் இருந்து வருகிறது. இப்போது களம் மாறியுள்ளது என நினைக்கிறீர்களா? தற்போது கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புள்ளது என பாஜக ஏன் நினைக்கிறது?

பதில்: கூட்டணி ஆட்சி என்று நானும் இப்போது சொல்லவில்லை. பாஜகவும் நினைக்கவில்லை.

கேள்வி: ஒரு கூட்டணி என்பதை இரண்டு தரப்பிலும் தான் அறிவிப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டும் அறிவிப்பு வெளியிட்டதை ஒரு சர்வாதிகாரப் போக்காக இருந்ததா என்ற கேள்வி எழுப்பப்படுகிறதே?

பதில்: அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. வீட்டில் வைத்துப் பேசும்போதே, “இன்று நான் செய்தியாளர் சந்திப்பை நடத்திக்கொள்கிறேன். நீங்கள் மற்றொரு நாள் செய்தியாளர் சந்திப்பை நடத்திக்கொள்ளுங்கள்” எனப் பேசப்பட்டு விட்டது.

கேள்வி: தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. இப்போதே இந்தக் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற தேவை உள்ளதா?

பதில்: 1996 தேர்தலில் காங்கிரஸும் – அதிமுகவும் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் கூட்டணி அமைத்தார்கள். ஆனால் இரு கட்சித் தொண்டர்களும் ஒருவர் மற்றொருவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைத்து அனைத்து கட்சித் தோழர்களையும் இணைத்துச் செயல்படுவதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

கேள்வி: இரண்டு கட்சித் தொண்டர்களும் இணக்கமாகச் செயல்படுவதற்குக் கால அவகாசம் தேவை என்று இருகட்சித் தலைவர்களும் கூறுகிறார்கள். அப்படியென்றால் தற்போது இரண்டு கட்சித் தொண்டர்களும் இப்போது பிரிந்து உள்ளார்கள் என்று பொருள் கொள்ளலாமா?

பதில்: பிரிந்துள்ளார்கள் எனக் கூறமுடியாது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை. அப்போது கூட்டணி இருக்குமா? இல்லையா? என்ற கேள்வி இருகட்சித் தொண்டர்களுக்கும் இருந்தது. அதைச் சமன்படுத்துவதற்காகத்தான் இந்த முடிவு.

இதையும் படிக்க: “இரு மொழிக் கொள்கையும்; சிங்கப்பூர் – தமிழ்நாடு வளர்ச்சியும்..” – முன்னாள் ஐ.ஏ.எஸ். அஷோக் வர்தன் ஷெட்டி ஓபன் டாக்

கேள்வி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்து அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும் அமைந்தது. தற்போது அதிமுக – பாஜக கட்சிகளின் தலைவர்கள் மட்டும் தான் கூட்டணி அமைக்கிறீர்கள். மற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்து விடப்பட்டதா என்ற கேள்வி வருகிறதே?

பதில்: அவர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள். ஆனால் அதிமுக இப்போதுதானே புதிதாக வந்துள்ளது.

கேள்வி: அன்புமணி ராமதாஸிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க அவர் மறுக்கிறார். அப்படியென்றால் அவர்களுக்குக் கால அவகாசம் தேவை என்று பார்க்கப்படுகிறதா?

பதில்: ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் நேரத்தில் கூட்டணி இருக்கும். அந்தக் கூட்டணி அந்த ஆட்சி முடியும் வரையில் அப்படியே தொடரலாம். திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் தற்போது வரை தொடர்ந்துகொண்டே உள்ளது. எனவே ஒருசில விஷயங்களில் கொள்கை ரீதியான தேவை அல்லது கோரிக்கைகள் இருக்கும். அது பேசி முடிவெடுக்கப்படும்.

கேள்வி: 2024 தேர்தலில் அதிமுகவிற்குத் தென் மாவட்டங்கள் ஒரு சவாலாக அமைந்தது. தற்போது அந்தக் களம் எப்படி உள்ளது? ஓபிஎஸ், டிடிவி தினகரன் இல்லாமல் இந்தக் கூட்டணி நிறைவுபெறுமா?

பதில்: தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒருவிதமாகவும், பாராளுமன்றத் தேர்தலில் ஒருவிதமாகவும் வாக்களிக்கிறார்கள். அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற்போலவும், கூட்டணி அடிப்படையிலும் அந்த வாக்குகள் மாறும்.

கேள்வி: 2026இல் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைப்போம் என அண்ணாமலை சொல்லியிருந்தார். மேலும் அன்புமணி ஆகியோரும் அந்தக் கூட்டணி ஆட்சியில் இடம் பெறுவோம் எனக் கூறிவந்தார்கள். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறீர்கள். எந்த அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற இடத்திற்கு வருகிறீர்கள்?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இன்று சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பள்ளி மாணவர்கள் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த அரசு இன்னும் இருக்கக்கூடாது. அதனால் தான் கூட்டணி அனைத்தையும் சேர்த்து வைத்துப் போட்டியிடுவோம்.

கேள்வி: அப்போது திமுக ஆட்சியை அகற்றிவிட்டு பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது பாஜக கூட்டணியை மட்டும் வைத்து அதைச் செய்ய முடியாது. எனவே அதிமுக கூட்டணி என்ற இடத்திற்கு பாஜக வந்துள்ளதா?

பதில்: எல்லோரும் சேர்ந்தால் தான் ஜெயிக்கமுடியும். இதுதான் வெற்றிக்கான அச்சாரம்.

கேள்வி: “ஒரு தென்றல் போல இருப்பேன்” எனக் கூறினீர்கள். புயல் வீசிக்கொண்டிருக்கும் ஒரு களத்தில் தென்றலாக எப்படி இருக்க முடியும்? அதை இன்னொரு விதமான அணுகுமுறையாகப் பார்க்கிறீர்களா?

பதில்: புயலுக்குப் பிறகு தான் அமுதமழை பொழியும். நாட்டில் அமைதி வரும். சுபிட்சம் வரும். அப்படி ஒரு சூழ்நிலை வந்துள்ளது.

கேள்வி: தேர்தல் ஒருபுறம் இருந்தாலும், பாஜக கட்சியின் கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் உங்கள் இலக்கு என்னவாக உள்ளது?

பதில்: அடுத்த ஓர் ஆண்டில் தேர்தல் வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இன்னும் நிறைய உறுப்பினர்களைச் சேர்த்து பூத் கமிட்டியை வலுப்படுத்தி எங்கள் தரப்பில் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். இதையடுத்து தலைமை யாரையெல்லாம் கூட்டணியில் சேர்க்கிறதோ, அவர்களுடன் பேசி திமுக ஆட்சியிடமிருந்து மக்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுத் தர வேண்டும்.

கேள்வி: திமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் அவர்கள் வீழ்த்த முடியாத அளவு அவ்வளவு வலுவாக உள்ளார்கள் என்று நீங்களே ஒப்புக்கொள்வதைப்போல ஆகிவிடுகிறது தானே?

பதில்: அவர்கள் தனித்தனியாக இல்லையே. அவர்கள் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பதாகக் கூறினால், நாங்களும் தனித்து நிற்கிறோம்.

கேள்வி: திமுக கூட்டணி அமைந்ததில் இருந்தே 2 விஷயங்கள் பாஜகவிற்குச் சிக்கலாகவே உள்ளது. ஒன்று பாஜக எதிர்ப்பு. மற்றொன்று மாநில நலன். பாஜகவை மாநில நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக முன்னிறுத்துகிறார்கள். அது உங்களுக்கு ஒரு சவாலாக இல்லையா?

பதில்: அனைத்து விஷயங்களிலும் அவர்கள் சொல்வது முன்னுக்குப் பின்னாக உள்ளது. இன்று அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் நீட் உள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே அவர்கள் நீட் விலக்கை கொண்டு வருவோம் எனக் கூறினார்கள். அவர்களால் கொண்டு வர முடிந்ததா? அது ஒரு பொய் பிரச்சாரம்.

ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட்டிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அது குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது முறையாக அந்தத் தீர்மானம் வேண்டுமா என்பது தேவையில்லாத ஒன்று தான். தற்போது நீட் காரணமாக அனைத்து மாணவர்களும் படிக்கிறார்கள். மேலும் முல்லை பெரியாறு, காவிரி, மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகளைப் பாராளுமன்றத்தில் பேசாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதுமா?

கேள்வி: மாநில உரிமைகள், நீட், மொழிக்கொள்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் திமுக – அதிமுகவிற்கு ஒரே கொள்கை தான் உள்ளது. பாமகவும் இந்த விவகாரங்களில் திமுகவுடன் தான் உள்ளார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்போது பாஜக மட்டும் தான் வெளிநடப்பு செய்கிறது. தேர்தலில் இது எதிரொலிக்காதா?

பதில்: அது அவர்களுடைய கொள்கை. தேர்தலில் எங்களுக்கு திமுகவிற்கு எதிரான கூட்டணி. அவ்வளவுதான்.

கேள்வி: தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் கொடுப்பது குறித்து பல விமர்சனங்களை வைக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. தற்போது நயினார் நாகேந்திரன் தலைவராக இருக்கும்போது தமிழ்நாட்டிற்கான திட்டங்களைக் கொடுத்தால் இயற்கையாக வாக்குகளை வாங்கலாம் தானே.

பதில்: இன்று தமிழகத்திற்கு முதலமைச்சர் அறிவிக்கும் திட்டத்திற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இவர்கள் மட்டும் தனியாகப் பணம் கொடுப்பதைப்போல சொல்கிறார்கள். சாலைகள் வசதி, போக்குவரத்து, துறைமுகம், விமானம் உள்ளிட்டவைகள் நன்றாக இருந்தால் தான் வெளிநாடுகளிலிருந்து முதலீடு வரும். தீர்மானங்களை மட்டுமே போட்டால் மக்களுக்கு என்று இவர்கள் நல்லது செய்வார்கள்? பிரதமரைப் பார்த்து அணுகுமுறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டு, முரண்பட்ட கருத்துக்களுடன் இருந்தால் எப்படி?

கேள்வி: தற்போதுகூட தொகுதி மறுவரையை குறித்து பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளார்கள்.

பதில்: தொகுதி மறுவரையை குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை பேசப்படவில்லை. எந்த மத்திய அமைச்சரும் பேசவில்லையே.

கேள்வி: 2026-உடன் அந்த நேரம் முடிவடைகிறதே?

பதில்: வாஜ்பாய் அவர்கள் காலத்தில் 25 ஆண்டுகள் அது நிறுத்திவைக்கப்பட்டது. தற்போதும் அது நிறுத்திவைக்கப்படலாம் தானே. அது வரும்போது பேசிக்கொள்ளலாம்.

கேள்வி: பாஜக போன்ற ஒரு கட்சியில் பல தலைவர்கள் உள்ளார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் கூடுதல் பொறுப்பு தேவை என நினைக்கிறீர்களா?

பதில்: நான் 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தேன். அனைவரும் எனக்கு நண்பர்களாகத் தான் உள்ளார்கள். அனைவரையும் சேர்த்து எல்லாக் காரியத்தையும் செய்தால் அந்தக் குறை இருக்காது.

கேள்வி: தேர்தலுக்குள் பாஜகவிற்கான கட்டமைப்பை உருவாக்க முடியுமா?

பதில்: தமிழகத்தில் உள்ள 69,000 பூத்களில் 50,000 பூத்களில் ஆட்கள் உள்ளனர். கட்டமைப்பு வலுவாகத் தான் உள்ளது.

கேள்வி: விஜய் தனியாக உள்ளார். அதனால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை அவர் பிரிக்க மாட்டாரா?

பதில்: தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது ஒரு போக்கு இருக்கும். தலைவர்களின் பிரச்சாரத்தின்போது ஒரு போக்கு இருக்கும். அதே போல தேர்தலுக்கு முந்தைய நாள் ஒரு போக்கு இருக்கும். அது எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கேள்வி: விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார் என எதிர்ப்பார்க்கிறீர்கள்?

பதில்: அதை உடனே சொல்ல முடியாது. யார் கூட்டணி அமைக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பலம் என்பதைப் பொறுத்தே அது மாறுபடும்.

கேள்வி: இந்திய அளவில் பிரதமர் vs others என உள்ளதைப்போல தமிழ்நாட்டில் முதல்வர் vs others என்றே உள்ளதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதை எப்படி பார்ப்பது?

பதில்: என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமான முதலமைச்சராக இருந்துள்ளார். தற்போதைய முதலமைச்சருக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கும். இருவரும் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் ஒரே களத்தில் தான் இருப்பர்.

கேள்வி: பாஜக கொள்கையிலிருந்து சீமான் நேர் எதிர் கொள்கையுடன் இருக்கிறார். அவரும் இந்தக் கூட்டணியில் இணைவாரா?

பதில்: கொள்கையில் முரண்பட்டாலும் தேர்தல் காலக் கூட்டணியில் ஒரு எதிர்ப்பு இருந்தால் அது கூட்டணிக்கு வலு சேர்க்கும்.

கேள்வி: தமிழகத்தில் பாஜகவிற்கு ஒரு எதிர்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

பதில்: அனைவருக்குமே ஒரு எதிர்ப்பு இருக்கும். அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. இருக்கின்றவர்களை வைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பார்க்க வேண்டும்.

First Published :

April 17, 2025 12:22 PM IST

Read More

Previous Post

தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் பங்காளி அநுர : கஜேந்திரன் பகிரங்கம்

Next Post

நடை ஓட்டத்தில் வெள்ளி வென்றார் நித்தின் குப்தா! | Nitin Gupta wins silver in the race walk

Next Post
நடை ஓட்டத்தில் வெள்ளி வென்றார் நித்தின் குப்தா! | Nitin Gupta wins silver in the race walk

நடை ஓட்டத்தில் வெள்ளி வென்றார் நித்தின் குப்தா! | Nitin Gupta wins silver in the race walk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin