
டி.கே.பி.கபில
இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ.) அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான இவர், 1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் இணைந்து, சு.ப. தமிழ்ச்செல்வனின் சாரதியாகப் பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர், அவ்வமைப்பிலிருந்து விலகி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி திருச்சிக்குத் தப்பிச் சென்று, அங்கு தற்காலிகமாக வசித்து வந்தவாறே சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு வசித்து வந்த வேளையில், 2015 ஜூலை 20 ஆம் திகதி அயலவர்கள் அளித்த தகவலின் பேரில், தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2018 ஏப்ரல் 27 ஆம் திகதி இந்திய நீதிமன்றம் இவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 45,000 இந்திய ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்தவும் உத்தரவிட்டது.
குறித்த தீர்ப்புக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டைத் தொடர்ந்து, இவரது சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இதன்படி, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கிருஷ்ணகுமார், தண்டனைக் காலம் நிறைவடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டு, இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 04:55 மணியளவில் திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘யு.எல்.-134’ (UL-134) விசேட விமானத்தின் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கட்டுநாயக்கவை வந்தடைந்த கந்தசாமி கிருஷ்ணகுமார், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் (TID) அன்றைய தினம் இரவே ஒப்படைக்கப்பட்டார்.

