Last Updated:
டெல்லி பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் நேசம் பெருமை எனக் கூறி, விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டினார்.
தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக ஊதியம் தரக்கூடிய பணிகளை துறந்து விட்டு, விவசாயம் செய்வதை தான் ஊக்கப்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்ட பிரதமர் மோடி, காளைக்கு மாலை அணிவித்து சக்கரைப் பொங்கல் வழங்கினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் இன்று சர்வதேச திருவிழாவாக மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கலை தமிழர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இயற்கை, குடும்பம் மற்றும் சமுதாயத்தை சம அளவில் கவனிக்க வேண்டும் என்பதை பொங்கல் பண்டிகை கற்றுக் கொடுப்பதாக கூறினார். தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். உரையின் இறுதியில் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, தமிழ் வாழ்க என்றும் குறிப்பிட்டார்.
Jan 14, 2026 12:36 PM IST
தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்; அது எனது பாக்கியம் – டெல்லி பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பேச்சு


