Courtesy: Nickey thomson
தமிழரசுக் கட்சியின் நிர்வாக சபைத் தெரிவு தொடர்பான வழக்கை மேலும் நீடிக்க விரும்பவில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
கட்சியின் யாப்புக்கு அமைவாக 156 உறுப்பினர்களின் வாக்குகளுடன் நிர்வாக சபைத் தெரிவை நடத்த கட்சித் தலைமை உறுதியளித்தால், வழக்கை உடனடியாக மீளப்பெறத் தயாரெனவும் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சாம்பத்தீவு வட்டாரக் கிளைச் செயலாளர் சந்திரசேகரம் பரா, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தேர்தல் நடவடிக்கை
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் எஸ். சிறிதரன் வெற்றி பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலையில் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தி, புதிய நிர்வாகிகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், கட்சியின் யாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி சில கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கும், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளின் தெரிவை நடைமுறைப்படுத்துவதற்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கட்சியின் பொதுக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கட்சியின் யாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்தத் தடை உத்தரவுகள் காரணமாக புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளால் தமது பொறுப்புகளை உடனடியாக ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கட்சியின் உள்நிர்வாக நடவடிக்கைகளில் தொடர்ச்சியான முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
