Last Updated:
Tamil Nadu Economic Growth | தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைத்துள்ளதாக 2025-26 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதில், தமிழ்நாடு 2025-26 ஆம் நிதியாண்டில் 10.83 விழுக்காடு உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டான 2024-25 இல் இந்த வளர்ச்சி விகிதம் 11.19 விழுக்காடாக இருந்தது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களின் தரவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், நாடு முழுவதிலும் அதிக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், தமிழ்நாடு ஆண்டுக்கு சராசரியாக 9.07 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. இது, முந்தைய ஐந்தாண்டு சராசரியான 5.21 விழுக்காடு என்பதில் இருந்து 3.86 விழுக்காடு அதிகமாகும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25 இல் 31.19 லட்சம் கோடியிலிருந்து 2025-26 இல் 35.29 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
“தமிழ்நாட்டில் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி – வெற்று முழக்கமல்ல… உண்மையான பொருளாதார வளர்ச்சி” என மத்திய புள்ளியல் துறை புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Apr 28, 2026 11:44 AM IST


