தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி மே 4 ஆம் திகதி காலை 8 மணிக்குத் தொடங்கும். தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகே, மின்னணு இயந்திரங்களில் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இத்தேர்தலில் மொத்தம் 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4.88 கோடி வாக்காளர்கள் (85.10 சதவீதம்) வாக்களித்தனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 78 சதவீத வாக்குப்பதிவுதான் அதிகபட்சமாக இருந்தது.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணியின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்தது. (a)


