சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளதாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் முதன்மை ஆணையர் ராம் நிவாஸ் முன்னிலை வகித்தார்.
விழாவில் ஏ.ஆர்.எஸ்.குமார் பேசுகையில், “இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற கொள்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி நம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி இருக்கிறது.
குறிப்பாக ஜிஎஸ்டி மீதான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பங்கு 78 சதவீதத்திலிருந்து 82 சதவீதமாக நடப்பாண்டு உயர்ந்திருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது 2023-24-ம் நிதியாண்டை (ரூ.57,987 கோடி) விட 9.23 சதவீதம் அதிகமாகும். அதேபோல் நடப்பு நிதியாண்டில் (2025-26) மே மாதம் வரை ரூ.11,209 கோடி வரி வசூலாகி இருக்கிறது.
இது கடந்த ஆண்டை விட 13.5 சதவீதம் அதிகமாகும். இதற்கிடையே வரி செலுத்த தவறியவர்கள், வரி ஏய்ப்பு, தணிக்கை, புதிய பதிவுகள் ஆகியவற்றில் 11.62 முதல் 23.85 சதவீதம் வரை கடந்த ஆண்டை காட்டிலும் வரி வசூல் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக வரி செலுத்துவோரில் சிறந்த செயலாற்றிய வணிகர்கள், சிறப்பாகப் பணிபுரிந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதரன் ரங்கராஜன், ஜிஎஸ்டி வடசென்னை பிரிவு தலைமை ஆணையர் ராம்நாத் ஸ்ரீனிவாச நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.