தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை: விஜய் அரசின் அதிரடி முடிவு..!!
தமிழகத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டாம் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆனால் இவற்றில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இனி புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க வேண்டாம் என தமிழக அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது என டிடி நெக்ஸ்ட் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்கல்வி துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வி துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது தான் புதிதாக பொறியியல் கல்லூரிகள் திறக்க அனுமதிக்க வேண்டாம் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 419 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சில முன்னணி சுயநிதி கல்லூரிகள் மட்டுமே அதிக மாணவர் சேர்க்கையை கொண்டுள்ளன. ஆனால், இதர நிலையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ளது. பல கல்லூரிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்கின்றனர், சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையும் உள்ளது.
இதனால் மாநிலத்தில் பொறியியல் கல்வியின் ஒட்டுமொத்த தரம் பாதிக்கப்படுவதாகவும், மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகள் கேள்விக்குறியாவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சில கல்லூரிகள் மூடப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 1 முதல் 3 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறதாம். எனவே இந்த சூழலை மாற்றவே, தற்போது புதிய கல்லூரிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இக்கூட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. புதிய மாநிலக் கல்வி கொள்கையை அறிமுகப்படுத்துதல், இளங்கலை படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்றி அமைத்தல், காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை விரைந்து நிரப்புதல், கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சித் துறையை ஊக்குவித்தல் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துதல், துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவின் அமைப்பை மாற்றியமைத்தல் மற்றும் பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட் குழுக்களில் தகுதி வாய்ந்த கல்வியாளர்களை நியமித்தல் என்பன போன்ற பரிந்துரைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் தரத்தையும் பொறியியல் படிப்புகளின் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

