Last Updated:
தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி வழங்க முடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம் தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியும், நடப்பு கல்வி ஆண்டுக்கான நிதியையும் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டிற்கு நிதி நிலுவையில் இருப்பது நன்றாக தெரியும் என்றும், புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு, அரசியல் உள்நோக்கத்தாலேயே புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையில் நாங்கள் தமிழை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும், அனைத்து மாநிலங்களும் தங்களுடைய தாய்மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்கிறோம். அதே நேரத்தில் மூன்றாவதாக ஒரு மொழியை படித்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம் என்று விளக்கமளித்தார்.
தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கை இருக்கிறது. அங்குள்ள மாணவர்கள் மூன்று மொழிகளையும் சிறப்பாக படிக்கிறார்கள். தமிழக அரசு மட்டும் இரு மொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார்.
February 15, 2025 6:48 PM IST


