நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்கு முக்கியமான காரணம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வது தான். அப்படிப்பட்ட தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது நம்முடைய உணவு மற்றும் உடை போன்றவை தான். பணம் இருந்தாலேயே உண்ண உணவும் உடுத்த உடையும் கிடைத்துவிடும்.
அப்படிப்பட்ட பணத்தை தரக்கூடிய தெய்வமாக தான் மகாலட்சுமி திகழ்கிறார். மகாலட்சுமியை வழிபாடு செய்ய பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் ஒரே ஒரு வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
மகாலட்சுமி வழிபாடு என்ற உடன் மகாலட்சுமி வீற்றிருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வழிபாடு செய்யும் முறை என்றுதான் கூறப்படுகிறது. அப்படி மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய பொருட்களுள் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய நாம் நினைத்த காரியத்தில் நமக்கு வெற்றிகளை தரக்கூடிய ஒரு பொருளாக தான் வெற்றிலை திகழ்கிறது.
வெற்றிலையை பயன்படுத்தி அனைத்து விதமான தெய்வங்களையும் நாம் வழிபாடு செய்வதுண்டு. ஏன் வழிபாடு என்றாலே வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது அல்லவா? எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தாலும் அதில் வெற்றிலை பாக்கின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலையை வைத்து மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும்.
இந்த வழிபாட்டை தினமும் செய்யலாம். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். செய்யக்கூடிய நேரம் என்பது முடிந்த அளவிற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்து விடுங்கள். ஒருவேளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். எப்பொழுதும் போல் வீட்டில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக தனியாக சிறப்பாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. விருப்பம் இருப்பவர்கள் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
கிழியாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு வெற்றிலையை எடுத்து பன்னீரை பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதற்கு நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் தடவிக் கொள்ள வேண்டும். அந்த சந்தனத்திற்கு மேல் ஒரே ஒரு குங்குமப் பொட்டை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை நம்முடைய வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பாள தட்டின் மேல் வைத்து அதை மகாலட்சுமியாக பாவித்து பின்வரும் இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது வாசனை மிகுந்த மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். இயலாதவர்கள் குங்குமத்தை பயன்படுத்தி கூட அர்ச்சனை செய்யலாம்.
மந்திரம் ” ஓம் தன தான்யாதிபதயே நமஹ “
தன தானியத்துடன் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிக அளவில் செலவு செய்து பலவிதமான யாகங்களையும் பூஜைகளையும் செய்வது உண்டு. அந்த பூஜைகளுக்கு எந்த அளவிற்கு பலன் இருக்கிறதோ அதேபோல் இந்த ஒரு வெற்றிலையை வைத்து முழு மனதோடு செய்யக்கூடிய வழிபாட்டிற்கும் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.




